Teladoc ரோபோ
எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு ஏதுவாக உதவி செய்யும். உலகெங்கிலும் இருக்கும் வெவ்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவர்களோடு கலந்தாலோசிக்கலாம். மருத்துவர்கள் 24 மணி நேரமும் நோயாளிகளைக் கண்காணிக்கலாம்.
தென்னிந்தியாவின் முன்னணி பன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளுள் ஒன்றான மதுரையில் இருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC), இந்தியாவில் முதன்முறையாக, 16 Mobile Teladoc Health ரோபோக்களை மருத்துவப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறது. மருத்துவ பரிசோதனைகள் செய்தல், நோயைக் கண்டறிதல், வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் உடல் அளவுருக்களை கண்காணித்தல் ஆகியவை ரோபோக்கள் மேற்கொள்ளும் பணிகள் ஆகும். உலகின் முதன்மையான ஆறு மருத்துவமனைகள் இத்தகைய ரோபோக்களை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் இத்தகைய ரோபோக்களை பயன்படுத்துகிற ஒரே மருத்துவமனையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனை திகழ்கிறது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் இது குறித்து கூறியதாவது: “Teladoc என்ற இந்த டெலிமெடிசின் (Telemedicine) ரோபோக்கள் தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய சுகாதார வசதிகளுள் புதுமையான ஒன்றாகும். எந்த நேரத்திலும், எங்கிருந்தாலும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க எமது மருத்துவர்களுக்குத் தேவையான திறனதிகாரத்தை இந்த ரோபோக்கள் தந்திருக்கின்றன. உலகத்தின் எந்த இடத்திலிருந்தும் மருத்துவத்துறையின் சிறப்பு வல்லுநர்களிடமிருந்து தேவையான நிபுணத்துவத்தை இப்போது நாங்கள் பெறமுடியும். இதன் மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒரு நோயாளிக்குச் சிகிச்சையளிக்க இப்போது ஒன்றுசேர இயலும். நோயாளிகளை அனைத்து நேரங்களிலும் 24*7 அடிப்படையில் இந்த ரோபோக்களைக் கொண்டு கண்காணிக்கவும் இயலும். தற்போது நிகழ்ந்து வரும் பெருந்தொற்று காலத்தின் போது பல நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு இந்த ரோபோக்கள் எங்களுக்கு உதவியிருக்கின்றன.”
மருத்துவர்களால் அறிவுறுத்தப்படும் அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகளான இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு போன்றவற்றை மேற்கொள்ளும் திறனை Teladoc Health ரோபோக்கள் கொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப சாதனங்களாக, CT மற்றும் MRI ஸ்கேன் இயந்திரங்கள் போன்ற பிற மேம்பட்ட நோயறிதல் சாதனைங்களையும் கட்டுப்படுத்த இவற்றைப் பயன்படுத்த முடியும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்த ரோபோக்களால் பிற நோயறிதல் சாதனங்களிலிருந்து தரவுகளைச் சேகரிக்கவும், அவற்றைப் புராசஸ் செய்து துல்லியமான முடிவுகளை மருத்துவர்கள் எடுக்குமாறு செய்ய உதவவும் இயலும். நோயாளி – மருத்துவர் கலந்துரையாடலை ஏதுவாக்க டிஸ்ப்ளே மானிட்டர்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் இந்த ரோபோக்களால் நோயாளிகளுடனான உறவினை மேம்படுத்தவும் இயலும்.
இத்தகைய டெலிமெடிசின் (Telemedicine) ரோபோக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதனால், துணை மருத்துவ பணியாளர்களின் வேலைவாய்ப்புகளை அகற்றவோ அல்லது குறைக்கவோ போவதில்லை என்று டாக்டர் குருசங்கர் தெரிவித்தார். மருத்துவர்கள் துல்லியமாக நோய்களைக் கண்டறிய உதவுவது, அவர்களது திறன்களை மேலும் உயர்த்துவது ஆகியவையே இவற்றின் பிரதான நோக்கமாகும். அதுமட்டுமின்றி, நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் அவர்களது வீட்டில் இருந்தாலும் இச்சேவையைப் பெற இயலும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். நோயாளியின் அமைவிடத்தை பொருட்படுத்தாது, தரமான, திறன்மிக்க சிகிச்சையை வழங்குவதே இதன் குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.
கொவிட்-19 தொற்று பரவலுக்குப் பிறகு உலகெங்கிலும், மொபைல் டெலிமெடிசின் (Mobile Telemedicine) ரோபோக்களின் தேவையும் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று டாக்டர் குருசங்கர் கூறினார். அனைத்து வகையான தொற்றுகளின் வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்க மருத்துவமனைகளுக்கு இந்த ரோபோக்கள் உதவுகின்றன என்பதே இதற்கு காரணம். உலகத்தரத்திலான சுகாதார சேவை அனைவருக்கும் எட்டுமாறு செய்வதற்கும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு மதுரையிலிருந்து மருத்துவ நிபுணர்களின் மூலம் சிறப்பான சேவைகளை வழங்குவதற்கும், இப்புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வழிகளை ஆராய மீனாட்சி மிஷன் மருத்துவமனை தயார் நிலையில் இருக்கிறது என்றார்.
செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் தொழில்நுட்பம், டெலிமெடிசின் (Telemedicine) மற்றும் சுகாதாரத் துறையில் நிகழ்ந்துள்ள பிற கண்டுபிடிப்புகளை பயன்படுத்துகின்ற முயற்சியினை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. கொவிட் பெருந்தொற்றைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க காலத்தின்போது, கொரோனா வைரஸுக்கு எதிராக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வழங்கப்பட்ட 6-அடுக்கு பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, மக்களிடம் கோவிட் அறிகுறிகளை கண்டறியவும், மருத்துவமனை வளாகங்களை தொற்று நீக்கி தூய்மைப்படுத்தவும், நோயாளிகளுக்கு மருந்துகளையும், உணவையும் வழங்கவும் ரோபோக்கள் திறம்படப் பயன்பட்டிருக்கின்றன.