சட்டம் அனைவருக்கும் சமம்: கொரோனா விதிமுறை மீறிய பிரதமருக்கு ரூ1.70 லட்சம் அபராதம் விதித்து நோர்வே பொலிஸ் அதிரடி!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவரமாக பரவி வரும் சூழலில், ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து பின்பற்றி வருகின்றன. அந்த வகையில், நோர்வே நாடும் தன் பங்குக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று, எந்தவொரு நிகழ்விலும் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என்பது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, அந்நாட்டின் பிரதமர் எர்னா சோல்பெர்க் தனது 60-வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். ஆனால், அந்நிகழ்ச்சியில் 13 பேர் கலந்துகொண்டனர். இதனால், அரசின் கட்டுப்பாட்டை பிரதமரே மீறிவிட்டார் என சர்ச்சை கிளம்பியதும், தாமாகவே முன்வந்து மன்னிப்பு கேட்டார்.
இருந்த போதிலும், பிரதமர் எர்னா சோல்பெர்க் கொரோனா விதிமுறையை மீறியதற்காக அந்நாட்டு காவல்துறை, இன்று ரூ. 1,75,000 (20,000 Norwegian crowns) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, நோர்வேயின் தலைமை காவல் அதிகாரி ஓலே சாவெருட்“சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருப்பதில்லை!” என்றார். மேலும், “சமூக கட்டுப்பாடுகள் குறித்த அரசின் விதிகளில், பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது சரியே” என விளக்கம் அளித்துள்ளார்.