யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் பயங்காரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் எண்ணங்களை முன்னெடுக்கவும் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கவும் முயன்றதாலேயே இவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.
யாழ் மாநகர சபையில் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்களைக் கண்காணிப்பதற்கென உருவாக்கப்பட்ட பணிக்குழாமுக்கு வழங்கப்பட்ட நீலநிறச் சீருடைகள் விடுதலைப்புலிகளின் காவல் துறையின் சீருடைகளை ஒத்திருப்பதாகக் குற்றம் சாட்டியே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னிலங்கை மாநகர சபைகள் சிலவற்றில் பணியாளர்கள் இதே நீலநிறச் சீருடைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மணிவண்ணன் அவர்களைக் கைது செய்ததின் மூலம் சீருடையின் நிறத்தைத் தெரிவு செய்யும் அற்ப அதிகாரத்தைக்கூட தமிழர்களிடம் விட்டுவைக்கத் தான் தயாராக இல்லை என்பதைப் பேரினவாத அரசாங்கம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
மணிவண்ணன் கைது தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று பொ. ஐங்கரநேசன் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடைகள் அவர்களுக்கே உரித்தான தனித்துவமான வரிகளை அடையாளமாகக் கொண்டவை. ஆனால், காவல்துறைக்கு அவர்கள் பயன்படுத்திய நீலநிறச் சீருடைகள் உலகப் பொதுவானவை. காக்கிச் சட்டைகள் மக்களின் மனங்களுக்கு அந்நியப்பட்டதாக உள்ளதால் மனங்களுக்கு மிகவும் நெருக்கமான உளவியல் நட்புமிக்க நீல நிறத்தைப் பெரும்பாலான நாடுகளில் காவல்துறையும் தனியார் பாதுகாப்புத் துறையும், இதர நிறுவனங்களும் சீருடைகளில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், யாழ் மாநகர சபை நீலநிறச் சீருடையைத் தெரிவு செய்ததைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயல்வதாக அரசாங்கம் சொல்வது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.
உள்ளூராட்சிச் சபைகள் சுயாதீனமானவை. மாகாணசபைகளின் நிர்வாகத்தின்கீழ் இருந்தாலும் உள்ளூராட்சிச் சபைகளின் சுயாதீனத்தில் மாகாணசபைகள் தலையிடுவதில்லை. இந்நிலையில் மாகாணசபையின் கீழுள்ள மாநகரசபையின் சீருடை விடயத்தில் காவல் துறையின் மூலம் அரசாங்கம் தலையிடுவது அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது. சீருடையை வடிவமைத்த விடயத்தில் ஏதேனும் நிர்வாக ரீதியான முறைகேடுகள் இருப்பின் உள்ளூராட்சித் திணைக்களமே அதற்கான விசாரணையை மேற்கொள்ள முடியும். மாகாணசபைகள் இயங்காத நிலையில் ஆளுநர் இவ்விடயத்தில் தலையிட்டிருக்க முடியும். இதைத்தாண்டி பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் இந்த விடயம் கையாளப்படுவதை அதிகாரப் பரவலைக் கோரும் சிறுபான்மை மக்களுக்குப் பேரினவாத அரசாங்கம் விடுத்திருக்கும் ஓர் எச்சரிக்கையாகவே கருத வேண்டும்.
அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ்க் கட்சிகள் இதனை நியாயப்படுத்தக்கூடும். ஆனால், தங்களுக்கு இடையே முரண்பாடுகள், பிளவுகள் இருந்தாலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் யாவும் யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைதுக்கு எதிராகவும் அவரின் விடுதலையை வேண்டியும் ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.