மட்டக்களப்பு மாநகரசபையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தி நகராமல், அதை சுற்றி கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டுள்ளது. மாநகரசபைக்குள் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியின் விளைவாக இந்த விசமத்தனமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது
மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கும், முதல்வரிற்குமிடையில் அண்மைக்காலமாக அதிகார போட்டி நிலவி வருகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையாளர், அரச தரப்பின் முகவராக செயற்பட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மாநகர செயற்பாட்டை குழப்ப முனைவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் குற்றம்சாட்டுகின்றன.
இந்த அதிகார போட்டி, அண்மையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் வரை சென்று, ஆணையாளரின் அதிகாரங்களிற்கு கடிவாளமிடப்பட்டிருந்தது.
மட்டக்களப்ப மாநகரசபையில் செயற்பாட்டிலுள்ள அமரர் ஊர்தியும் அதிகார போட்டியில் சிக்கியது. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரனின் அறக்கட்டளையினால் இந்த அமரர் ஊர்தி சேவை நடத்தப்படுகிறது.
மாநகரசபை வாகன தரிப்பிடத்தில் நின்ற அமரர் ஊர்தியை, அங்கு தரித்து நிற்க ஆணையாளர் தடைவிதித்திருந்தார்.
நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, நேற்று நடந்த மாநகரசபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், நேற்று மாலை மீளவும் மாநகரசபை வாகன தரிப்பிடத்தில் அமரர் ஊர்தி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக, மாநகரசபை பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி, கட்டிட இடிபாடுகள் அமரர் ஊர்தியை சுற்றி கொட்டப்பட்டுள்ளன. அமரர ஊர்தியில் இருந்த எழுத்துக்களும் மறைக்கப்பட்டுள்ளன.