ஜோர்டானின் முன்னாள் பட்டத்து இளவரசர் ஹம்சா பின் ஹுசைன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது சட்டத்தரணி மூலம் வெளியிட்டுள்ள காணொளியில் தான் வெளியே செல்ல அனுமதியில்லை என்று ஹம்சா கூறியிருந்தார்.
நாட்டின் தலைவர்கள் ஊழலில் திளைப்பதாகவும் திறனற்ற ஆட்சி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தில் தொடர்புபட்டுள்ளதாக குறிப்பிட்டு ஹம்சா உட்பட பல உயர்மட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்சா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டதை இராணுவம் மறுத்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு, நிலைத்தன்மையைப் பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டதாக இராணுவம் கூறியது.
ஆனால் எந்தவித சதித் திட்டத்திலும் ஈடுபடவில்லை என்று இளவரசர் ஹம்சா கூறினார்.
இதற்கிடையே எகிப்து, சவூதி அரேபியா உள்ளிட்ட பிராந்திய நாடுகள் தற்போதைய மன்னர் அப்துல்லாவுக்கான தங்களுடைய ஆதரவை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளன.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில்ஜோர்தானுடம் இணைந்து செயற்படும் அமெரிக்காவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ஜோர்தான் மன்னர் அமெரிக்காவின் முக்கிய பங்காளி என்றும் மன்னருக்கு முழு ஆதரவு உண்டு என்றும் தெரிவித்துள்ளது.
காலஞ்சென்ற மன்னர் ஹுசைன் மற்றும் அவருக்குப் பிடித்தமான மனைவியான அரசி நூர் தம்பதியரின் கடைசி மகன் ஹம்சா.
இங்கிலாந்தில் படித்து அவர் பட்டம் பெற்றதுடன், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலும் படித்துள்ளார்.
மன்னரின் அன்புக்குரிய மகனாக விளங்கிய ஹம்சா 1999ல் பட்டத்து இளவரசராக பெயர் குறிப்பிடப்பட்டார்.
ஆனால் மன்னர் ஹுசைன் மறைந்த நேரத்தில் வாரிசு என்று முடிசூட்ட ஹம்சா மிகவும் இளமையாகவும் அனுபவமற்றவராகவும் கருதப்பட்டார். இதனால் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அப்துல்லா அரியணை ஏறினார். 2004இல் ஹம்சாவின் இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.