நடிகை அஞ்சலி தனது காதல் தோல்வியை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
அஞ்சலி நடித்த சைலன்ஸ் படம் ஓ.டி.டி.யில் வெளியானது. தற்போது தமிழில் பூச்சாண்டி படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
அஞ்சலி அளித்த பேட்டி வருமாறு:-
“நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகி விட்டன. தென்னிந்திய மொழிகளில் இதுவரை 45 படங்களில் நடித்து விட்டேன். இன்னும் 5 படங்கள் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கு சினிமாவில் தெரிந்த யாரும் இல்லை. சினிமாவுக்கு வந்தபிறகுதான் எல்லாம் கற்றுக்கொண்டேன். நான் நடித்த முதல் படமான கற்றது தமிழ் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. எந்த பின்னணியும் இல்லாமல் இவ்வளவு உயர்ந்து இருப்பது பெருமை. படம் வெற்றி தோல்வி எனது கையில் இல்லை. எத்தனை படங்கள் என்பதை விட தரமான படங்களில் நடித்தோமா என்பதே முக்கியம்.
கதைகள் கேட்டு நடிக்க மறுத்தால் இவளுக்கு திமிர் என்று நினைத்து விடுவார்களோ என்ற பயம் ஏற்படுகிறது. சில படங்களில் நடித்த பிறகு ஏன் இதில் நடித்தோமோ என்ற வருத்தம் இருக்கும்.
நான் காதலில் விழுந்தேன் என்றும், எனக்கு குழந்தைகள் இருக்கிறது என்றும் தகவல் பரவி உள்ளது. காதலில் விழவே இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். ஒருவரோடு காதலில் இருந்தேன். அது நிறைவேறவில்லை. அது நடந்து இருந்தால் நானே பெருமையாக எல்லோருக்கும் சொல்லி இருப்பேன். நடிகை மட்டுமன்றி எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வியானால் அந்த வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம்தான். பெண்கள் இதயம் கல் இல்லை. ஆனால் அந்த வேதனையில் இருந்து நான் கொஞ்சம் சீக்கிரமாகவே வெளியே வந்து விட்டேன். அதற்கு எனது அம்மாதான் காரணம். அவர் வலிமையான பெண். அம்மா கொடுத்த தைரியத்தில்தான் இன்னும் சினிமாவில் நீடிக்கிறேன்.
5 முறை எனக்கு எல்லோரும் திருமணம் செய்து வைத்து விட்டனர். குழந்தை இருப்பதாக கூட பேசினார்கள். எனது கணவரையும், குழந்தையையும் யாராவது காட்ட முடியுமா?” என்றார்.