உத்தரபிரதேச குற்றவாளியும், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏ.வுமான முக்தார் அன்சாரி, பஞ்சாப் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொலை, ஆள்கடத்தல் மற்றும் மதக்கலவரம் தூண்டுதல் உட்பட பல்வேறு குற்றங்களில் சிக்கிய அன்சாரி கடந்த 2005 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்தபடி மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டார் அன்சாரி. இவர் 2017-ல் மீண்டும் மாயாவதியின் பகுஜன் சமாஜில் இணைந்தவர், உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு அருகிலுள்ள மாவ் மாவட்டத்தின் முகம்மதாபாத்தின் எம்எல்ஏ ஆனார்.
அன்சாரி மீது பஞ்சாபிலும் ஆள்கடத்தல் வழக்கு உள்ளது. இதனால், அவர் இரண்டு வருடங்களுக்கு முன் வழக்கின் விசாரணைக்காக பஞ்சாபின் ரோபட் சிறைக்கு மாற்றப்பட்டார். இங்கிருந்து அவர் மொஹலி மாவட்ட நீதிமன்றம் செல்ல உத்தர பிரதேசத்தில் பதிவான ஒரு ஆம்புலன்ஸை பயன்படுத்தி வந்தார். இதற்கு அவர் பஞ்சாப் சிறைக்கு வந்தது முதல் தனது உடல்நிலை குன்றி வருவதாக மொஹலி நீதிமன்றத்தில் அனுமதியும் பெற்றிருந்தார்.
அந்த ஆம்புலன்ஸ் உத்தர பிரதேசத்தின் பாரபங்கியிலுள்ள ஒரு மருத்துவமனையின் பெயரில் பதிவாகி இருந்தது. முக்தாரின் உயிருக்கு அவரது எதிரிகளால் ஆபத்து எனக்கூறி அது குண்டு துளைக்காதபடி அமைக்கப் பட்டிருந்தது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதியிலிருந்த போது முக்தாருக்கு அவரது கட்சியின் ஆட்சியில் 2013-ல் இந்த குண்டு துளைக்காத ஆம்புலன்ஸ் வசதி கிடைத்திருந்தது.
இந்நிலையில், முக்தார் பயன்படுத்திய ஆம்புலன்ஸ், இல்லாத மருத்துவமனை பெயரில் இயங்கி வந்தது தெரிந்தது.
அந்த மருத்துவமனையை உத்தர பிரதேச காவல் துறை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே, அந்த ஆம்புலன்ஸின் உரிமையாளர் டாக்டர் அல்கா ராய் மற்றும் பெயர் தெரியாத மூவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
இதனிடையே, விசாரணைக்காக என அழைத்துச் சென்ற முக்தாரை காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் அரசு வழக்கு முடியவில்லை எனக் காரணம் காட்டி திரும்ப அனுப்ப மறுத்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் ஒருவர் மீது மற்றொருவர் என கடும் விமர்சனங்களை எழுப்பினர். பிறகு முக்தாரை மீண்டும் தன் விசாரணைக்காக உபி அரசு வேறுவழியின்றி, உச்ச நீதிமன்றம் அணுகி மார்ச் 26-ல் திரும்ப அழைத்துக்கொள்ளும் உத்தரவு பெற்றது. ரோபடிலிருந்து முக்தாரை உத்தரபிரதேசத்தின் பாந்தா சிறையில் கொண்டு வந்து அடைக்க அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது.
முக்தார் அன்சாரி முதன் முறையாக மாயாவதி தலைமை யிலான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு மாவ் தொகுதியின் எம்எல்ஏ ஆனார். பிறகு இருமுறை சுயேச்சையாக அதே தொகுதியில் வென்றார். 2009-ல் கவுமி ஏக்தா தளம் எனும் பெயரில் புதிய கட்சியை துவக்கி அதன் சார்பில் 2012 சட்டப்பேரவை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் 43 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை போட்டியிட வைத்தார் அன்சாரி.
இதில் அன்சாரியுடன் சேர்த்து இரண்டு எம்எல்ஏ.க்கள் வென்றனர். கடந்த 2017 தேர்தலில், பகுஜன் சமாஜில் இணைந்து எம்எல்ஏவானார். இவர் சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமான முக்தார் அகமது அன்சாரியின் பேரன் ஆவார்.