அ்ண்மையில் யாழ்ப்பாணம் வந்த போது, கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்திக்காமல் சென்ற இரா.சாணக்கியனை மறைமுகமாக கடுமையாக சாடியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
அண்மையில் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர், இளைஞர்களின் பெயரில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மாவை சேனாதிராசாவிற்கு எதிராக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கருதப்பட்டது. இந்த கூட்டத்திற்கு மாவை சேனாதிராசாவிற்கு அழைப்பு விடுக்காமல் செய்யப்பட்டதை, தமிழ்பக்கம் அப்பொழுதே சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த கூட்டத்திற்கு வந்த சாணக்கியன், மாகாணசபை தேர்தலை முன்னிட்டு எம்.ஏ.சுமந்திரன் அணிக்காக 3 நாட்கள் யாழில் தங்கியிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எனினும், யாழ்ப்பாணத்தில் இருக்கும் கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவுடன் தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளவில்லை.
சாணக்கியனை கட்சிக்குள் இணைப்பதில் மாவை சேனாதிராஜா முக்கிய பங்கு வகித்தார். வெளிநாட்டிலுள்ள சாணக்கியனின் உறவினர்கள் மாவையை தொடர்பு கொண்டு, மஹிந்தவுடன் இணைந்திருந்ததை மன்னித்து கட்சியில் இணைக்கும்படி கோரியிருந்தனர். இதனடிப்படையில சாணக்கியனை கட்சியில் இணைத்தார் மாவை. எனினும், தேர்தலில் வென்ற பின் முதலாவது முறை யாழ்ப்பாணம் வந்தபோது, மாவையை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டார்.
இது பற்றி தொலைக்காட்சியொன்றில் பேசிய சி.சிறிதரன்,
“மாவை சேனாதிராசா அண்ணன் கட்சி தலைவராக உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும். அப்படியென்றால்தான் மற்றவர்களிற்கு ஒரு பயம் வரும். கேட்டு செய்ய வேண்டுமென்ற உணர்வு வரும். வேறு மாவட்டங்களிருந்தோ அல்லது கிழக்கிலிருந்தோ ஒரு பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணம் வந்தால், தலைவரை சென்று சந்திக்கும் நிலைமை ஏற்பட வேண்டும்.
நாங்கள் வடக்கிலிருந்து கிழக்கிற்கு சென்றால், அங்குள்ள கட்சியின் பொதுச்செயலாளரை சென்று சந்திக்க வேண்டும். அதற்கான சூழல் இருக்க வேண்டும். அந்த ஒற்றுமைகள் கூட இன்று எம்மிடமிருந்து தள்ளிச் செல்கிறது.
வந்தார்களா, போனார்களா, இந்த தலைமுறைகளிற்குள் ஏன் இந்த இடைவெளியென்ற கேள்விகள் எம்மிடம் வருகிறது.
அண்மையில்கூட யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் சுமந்திரன், சாணக்கியன் பேசினார்கள். அதில் மாவை சேனாதிராசா அழைக்கப்படவில்லை. அவருக்கு அது சொல்லப்படவில்லையென்ற மனக்குறை உள்ளது.
இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடந்த கூட்டத்திற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நான் சொன்னேன், மாவை சேனாதிராசாவையும் கூட்டத்திற்கு அழைக்க வேண்டுமென. அவருடன் பேசுவதாக சுமந்திரன் என்னிடம் கூறினார். ஆனால், அழைத்ததாக நான் அறியவில்லை.
அமிர்தலிங்கம் தோல்வியடைந்திருந்த போது வெளிநாட்டு துதர்கள் அவரை சந்தித்தனர். அவருடன் போட்டியாளராக இருந்த சிவசிதம்பரம் கூட அவரை சென்று சந்தித்து வந்தார்“ என்றார்.