27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil
மருத்துவம்

கவனம் கர்ப்பப்பை!

கர்ப்பப்பை என்பது, பெண் உடலின் பிரதான உறுப்பு மட்டுமல்ல… பாதுகாப்புடன் பேணிக்காக்கப்பட வேண்டியதும் கூட. ஆனால், இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றிய அறியாமை, வெளிப்படையாகப் பேசுவதற்கான தயக்கம், பம்பரமாகிவிட்ட வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவுகள் என எல்லாம் சேர்த்து உயிரைச் சுமக்க வேண்டிய கர்ப்பப்பையில் கட்டிகளையும் சேர்த்துச் சுமக்க வேண்டிய நிலையாகி விட்டது.

குழந்தையைச் சுமப்பதோடு மட்டும் கர்ப்பப்பையின் வேலை முடிந்து விடுகிறதா? கர்ப்பப்பை கட்டிகளுக்கு ஒரே தீர்வு அதனை ஒரேயடியாக நீக்குவதுதானா? அத்துடன் உடலின் ஓர் அங்கமாக, பொக்கிஷமாக இருக்கும் ஓர் உறுப்பினை வேண்டாமென தூக்கி எறிவது சரிதானா? கர்ப்பப்பை ஆரோக்கியம் அறிவோமா?

கர்ப்பப்பையின் பொதுவான அளவு என்ன?

கர்ப்பப்பையானது உள் பகுதியான எண்டோமெட்ரியம், நடுப்பகுதியான மையோமெட்ரியம் மற்றும் மேல் பகுதியான பெரிமெட்ரியம் என மூன்று அடுக்குகளால் ஆனது. பருவமடைந்த ஒரு பெண்ணின் கர்ப்பப்பையானது பொதுவாக ஆறு முதல் எட்டு செ.மீ நீளமும், ஐந்து செ.மீ அகலமும், இரண்டு செ.மீ தடிமனும் உடையது. கர்ப்பக்காலத்தின்போது கர்ப்பப்பை விரிவடைவதால், குழந்தை பிறந்த பிறகு அதனுடைய நீளமானது ஒன்பது முதல் பத்து செ.மீ என மாறும். இதேபோல் பிரசவத்துக்கு முன்னர் 60 கிராம் இருந்த கர்ப்பப்பையின் எடையும் குழந்தை பிறந்த பின் 90 கிராமாக மாறி விடும்.

குழந்தை பிறக்கும்போது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?

தாயின் வயிற்றில் வளரத்தொடங்கும் பெண் குழந்தைக்கு, கர்ப்பப்பையானது இரண்டு பாகங்களாக பிரிந்து இருக்கும். குழந்தையின் உடல் முழுதாக உருப்பெறும்போது, கர்ப்பப்பையின் பாகங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து முழுமையானதாக வளர்ச்சி பெறும்.

சில குழந்தைகளுக்கு, கர்ப்பப்பையின் ஒரு பாதி நன்கு வளர்ச்சியடைந்து, மற்றொரு பாதி வளர்ச்சியடையாமல் போகலாம். இன்னும் சிலருக்கு இரண்டு சினைப்பைகளும் நன்கு வளர்ச்சியடைந்து கர்ப்பப்பை வளர்ச்சியடைந் திருக்காது. சில குழந்தைகளுக்கு இரண்டு கர்ப்பப்பபை, கர்ப்பப்பையின் வாய் பகுதி இரண்டாகவே உருவாவது, கர்ப்பபையின் நடுவில் ஒரு செப்டம் (பிரிக்கும் பகுதி) உருவாவது போன்றவை நடக்கலாம். இவை எந்த அறிகுறிகளையும் உடலில் காட்டாது.

கர்ப்பப்பை கட்டிகள் ஏற்பட என்ன காரணம்? அவை புற்றுநோய் கட்டிகளாக மாறுமா?

ஃபைப்ரோய்ட் என சொல்லக்கூடிய நார்க்கட்டிகள் பெண்களுக்கு இனப்பெருக்க வயதில் ஏற்படக்கூடியவை. ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்களின் அதிகச் செயல்பாடுதான் இதற்குக் காரணம். இந்தக் கட்டியானது ஒரே கட்டியாகவோ அல்லது கருப்பையில் உண்டாகும் சிறியளவிலான பல கட்டிகளாகவும் (பி.சி.ஓ.டி) இருக்கலாம். உடல் எடை கூடுதல், சீரற்ற மாதவிடாய் சுழற்சி, அதிகப்படியான உதிரப்போக்கு, மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் மிகுதியான வயிற்றுவலி, கால்வலி போன்றவை இதற்கான அறிகுறிகள். இந்தக் கட்டிகள் அளவில் சற்று பெரியதாக இருக்கும்போது, கர்ப்பப்பையின் அளவு பெரியதாகி விடும். இதனால் அருகிலுள்ள குடல் மற்றும் சிறுநீர்ப்பையின் மீது ஏற்படும் அழுத்தத்தால் சிறுநீர் கழித்தல் மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஆனால், ஃபைப்ரோய்ட் கட்டிகளுக்கு அறுவை சிகிச்சை என்பதோ, கர்ப்பப்பை நீக்கம் என்பதோ பொதுவாக தேவைப்படுவதில்லை. முதலில் சில மாத்திரைகள் மூலமாகவே கட்டிகளின் அளவானது குறைக்கப்படுகிறது. முடியாத நிலையில் மட்டும் லேப்ரோஸ்கோப்பி முறையில் அடிவயிற்றில் சிறிய துளை போட்டு, அதன் மூலமாக கட்டிகளை நீக்கலாம். ஃபைப்ராய்டு கட்டிகள் அனைத்தும் புற்றுநோய் கட்டிகளாக இருப்பதில்லை. அவற்றை கவனிக்காமல் விட்டு விடும்போதுதான் இந்த கட்டியிலுள்ள செல்கள் அதிகப்படியான வளர்ச்சியடைந்து புற்றுநோய்க் கட்டிகளாக மாறுகின்றன. அது மற்ற உறுப்புகளுக்கும் பரவலாம். எனவே சீக்கிரமாக சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான் சிக்கல்களைத் தவிர்க்கும்.

கர்ப்பப்பை இறக்கம் ஏன் ஏற்படுகிறது?

கர்ப்பப்பையானது நான்கு பக்கமும் சுருங்கி விரிவடையக்கூடிய தசைகளால் சூழப்பட்ட ஓர் உறுப்பு. கர்ப்பக்காலத்தில் உள்ளிருக்கும் குழந்தையின் அளவுக்கேற்ப கருப்பையின் தசைகளும் விரிவடையும் தன்மை உடையவை. பிரசவவலி ஏற்பட்டதும் ஒரு சிலருக்கு குழந்தை வெளிவருவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். அப்போது கர்ப்பப்பையைச் சுற்றியுள்ள தசைகள் சற்று வலுவிழந்து விடுகின்றன. இதன் காரணமாக, கர்ப்பப்பையை அதனுடைய இடத்தில் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. ‘புரோலாப்ஸ்’ என சொல்லக்கூடிய இறக்கம் ஏற்படுகிறது.

அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளுதல், பிரசவத்துக்குப் பிறகு உடனே அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்குதல், அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் தருகிற வேலைகளைச் செய்தல், அதிக உடல் எடை போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து, கர்ப்பப்பை இறக்கம் ஏற்படும்.

கர்ப்பப்பை கீழிறங்கும்போது அருகிலுள்ள‌ மற்ற உறுப்புகளான குடல் மற்றும் சிறுநீர்ப்பையில் ஏற்படுத்தும் அழுத்தத்தால் அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம், மலச்சிக்கல் போன்றவற்றுக்கு வழிவகுத்துவிடும்.

கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை எப்படித் தெரிந்து கொள்வது?

மாதவிடாய் சுழற்சியானது 28 நாள்களுக்கு ஒருமுறை சரியாக வந்தாலே, அது கர்ப்பப்பையும், உடலின் ஹார்மோன்களின் அளவும் சரியாக இருப்பதன் அறிகுறி. கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை ‘ஹிஸ்ட்ரோஸ்கோப்பி’ என்று சொல்லக்கூடிய ஸ்கான் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்பப்பையை வலுப்படுத்துவதற்காக பயிற்சிகள் அல்லது உணவுகள் ஏதேனும் உண்டா?

பெண்கள் அனைவருமே பிசியோதெரபிஸ்ட் அறிவுரைகளுடன் கர்ப்பப்பை தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக சற்று கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் பெண்களுக்கு, அதிகப்படியான அழுத்தத்தை அடிவயிற்றில் தரும்போது கர்ப்பப்பை இறங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதால் உடற்பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மீன், முட்டை, பருப்பு வகைகள் போன்ற புரோட்டீன் சத்து நிறைந்த உணவுகள் தசைகளுக்கு வலு சேர்க்கும். பிரசவத்தின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கினால் ஏற்படும் ஹீமோகுளோபின் இழப்பினை ஈடுகட்ட, இரும்புச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

யாருக்கெல்லாம் கர்ப்பப்பை நீக்கம் தேவை?

* நீண்ட காலத்துக்கு மாத்திரைகள் எடுத்தும் கட்டுப்படுத்தப்படாத அதிகமான உதிரப்போக்கு உள்ளவர்களுக்கு.

* வயது கூடிய பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் ஏற்படும்போது.

* கர்ப்பப்பையின் உட்சுவர் சவ்வுப்பகுதி உள்ளுக்குள் வளராமல், வெளியே வளர்ந்து ஆங்காங்கே இரத்தக்கட்டு ஏற்படுவதால் அதிக வலி மற்றும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும் நிலையில் (எண்டோமெட்ரியாசிஸ்).

* ஃபைப்ரோய்ட் கட்டிகள் அளவில் பெரியதாகி, புற்றுநோய் அறிகுறிகள் தென்படும்போது.

* பிரசவக்காலத்தில் ஏற்படும் குழந்தையின் மாறுபட்ட நிலை அல்லது முந்தைய அறுவை சிகிச்சையின் விளைவாக கர்ப்பப்பையின் ஒரு பகுதி கிழிந்திருக்கும்போது.

* இந்தப் பிரச்னைகளில் பெண்ணின் வயது கணக்கிடப்பட்டு, ஏற்கெனவே குழந்தை பெற்று இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமில்லை என சொல்லும் பெண்களுக்கு மட்டும் கர்ப்பப்பை நீக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment