யாழ் நகரத்தில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றையடுத்து, சில அவசர முடிவுகளை யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாண நகரத்தின் குறிப்பிட்ட சில வீதிகளில், குறிப்பிட்டளவான தூரம் மாத்திரம் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையத்தில் தனியாருடன் இணைந்து இ.போ.சவை சேவையில் ஈடுபடுத்த அதிகாரிகள் சில காலமாக பிரயத்தனத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இஃபோ.ச அதற்கு உடன்படாமலிருந்தது.
இன்று மத்திய பேருந்து நிலையத்தில் சேவைகளில் ஈடுபட முடியாத நிலையேற்பட்டதும், இ.போ.ச சேவைகளை எங்கு நடத்துவது என்ற இழுபறி இதுவரை நிலவியது.
சற்றுமுன் இது பற்றிய இறுதி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு அப்பால், தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை தூபிக்கு அருகிலுள்ள இடத்திலிருந்து இ.போ.ச சேவைகள் நடக்கும். அந்த பகுதியில் தனியார் சாரதி பயிற்சி நிறுவனங்களின் பயிற்சி நடந்து வந்தது. அதில் ஒரு பகுதியிலிருந்தே இனி இ.போ.ச சேவைகள் நடக்கும்.
மத்திய பேருந்து நிலையத்தின் வழக்கமான நிர்வாக பணிகள் இடம்பெறும். அங்குதான் பேருந்துகள் தரித்து நிற்கும். குறிப்பிட்ட நேரத்தில், தமிழாராய்ச்சி நினைவாலயத்திற்கு அண்மையில் சென்று பயணிகளை ஏற்றும்.
முன்னதாக, யாழ் புகையிரத நிலையத்தின் அருகிலுள்ள பிரதேசத்திலிருந்து சேவையை தொடர இ.போ.சவினர் ஆராய்ந்த போதும், அங்கு பயணிகளிற்கான மலசலகூட வசதியில்லையென்பதால் அந்த திட்டத்தை கைவிட்டனர்.