யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, யாழ் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் முடங்கும் நிலையேற்பட்டுள்ளது.
நீதித்துறை, அரசியல் வட்டாரங்களில் பலர் தனிமைப்பட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
கடந்த ஒரு சில தினங்களில் மணிவண்ணன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இந்த சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன் ஆகியோர் அவருடன் நெருக்கமான பழகியுள்ளனர்.
அத்துடன், நேற்று வரை அவர் வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்டார். இதனால், யாழ்ப்பாண நீதித்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
21ஆம் திகதி நடந்த நிகழ்வொன்றில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுடன் கலந்து கொண்டார்.
22ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பான வழக்கில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது கூட்டமைப்பின் எம்.பிக்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரும் கலந்து கொண்டதுடன், மூவரும் நெருக்கமாக நின்றும் உரையாடியிருந்தனர். எனினும், அப்போது அவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
இதுதவிர, யாழ் மாநகரசபை செயற்பாடுகளிலும், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தார்.
கடந்த 20ஆம் திகதி நெல்லிடியில் நடந்த திருமண விழாவில் வி.மணிவண்ணன் கலந்து கொண்டிருந்தார். மணமகனிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, இன்று காலை மணிவண்ணன் பிசிஆர் சோதனை மேற்கொண்டதில், தொற்று உறுதியாகியுள்ளது.