ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த மத்திய அரசு, வேடிக்கை பார்த்த அதிமுகவை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (24) வெளியிட்ட அறிக்கையில்,
“இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் அரங்கேற்றப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து 6 நாடுகளின் சார்பில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளது தமிழர்களுக்கு மத்திய அரசு இழைத்த மாபெரும் துரோகமாகும்.
பல லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததில் இலங்கை அரசுக்கும் பங்கு இருந்ததால்தான் அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்று உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், இது தொடர்பான தீர்மானத்தில் வாக்கெடுப்பின்போது இந்தியா வெளிநடப்பு செய்ததற்கு இலங்கை அரசு பாராட்டு தெரிவித்திருக்கிறது. அந்தளவுக்கு இனப் படுகொலையில் பங்கெடுத்த இலங்கைக்கு இந்தியா உதவியிருப்பது வெளிப்படையாக தெரிகிறது. தமிழ்ச் சமூகம் இதை ஒருபோதும் மன்னிக்காது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தங்களின் தேர்தல் அறிக்கையில், இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று சொல்லி இருந்த அதிமுக கடந்த சில நாட்களாகவும் சரி, இந்த வாக்கெடுப்பு முடிந்த பிறகும் சரி மவுனமாக வேடிக்கைப் பார்த்ததை தமிழ்நாட்டு மக்களும் ஈழத்தமிழர்களும் மன்னிக்க மாட்டார்கள்.
இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமலேயே இலங்கைக்கு எதிரான அந்தத் தீர்மானம் நிறைவேறியிருப்பது ஓரளவுக்கு ஆறுதல் தருகிறது. இதன் தொடர்ச்சியாக, விசாரணை நடக்கும் போதாவது இந்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் உரிய வகையில் தண்டிக்கப்பட வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.