கலைப் பிரிவின் கீழ் கற்பதற்கான ஆர்வம் மற்றும் கலை பட்டதாரிகள் மத்தியில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நாளை (23) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) கலந்துரையாடப்படவுள்ளது.
இவ்வாரம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு மூன்று நாட்கள் கூடவுள்ளது.
நாளை மறுதினம் (24) தேசிய இறைவரித் திணைக்களம் இக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருப்பதுடன், வரி நிர்வாக தகவல் கட்டமைப்பின் (RAMIS) தற்போதைய நிலைவரம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
தேசிய இறைவரித் திணைக்களம் கடந்த 10ஆம் திகதி இக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்ததுடன், இதன்போது வழங்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும்.
அத்துடன், எதிர்வரும் 25ஆம் திகதி வனஜீராசிகள் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கூடவுள்ளது.