அரச அதிகாரிகள் தமது செயற்பாடுகளை சுதந்திரமானதாகவும் மக்ளின் நலன் கருதியதாகவும் மேற்கொள்ள நிச்சயமாக விரைவில் காத்திரமான நடவடிக்கை எடுக்க உள்ளேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கொள்கை நிலைப்பாடுகளை செயற்படுத்தும் பொறுப்புமிக்க செயலணியின் தலைவர் பசில் ராஜபக்சவுடன் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் விவாத நிகழ்சியில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக யாழ் மாவட்ட அரச நிர்வாகத்தில் அங்கஜன் இராமநாதனின் தலையீடு அதிகரித்து, அரச ஊழியர்கள் பெரும் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. “எமது சொற்படி நடப்பதென யாழ்ப்பாண அரச அதிபரை பார்த்து பழகிக் கொள்ளுங்கள்“ என கிளிநொச்சி அரச அதிபரை அங்கஜன் தரப்பினர் மிரட்ட முயன்றதாக ஏற்கனவே டக்ளஸ் தேவான்தா குறிப்பிட்டிருந்த நிலையில், மீளவும் இந்த விடயம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசியிருக்கிறார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைய காலங்களில் யாழ் மாவட்டத்தில் மக்கள் சேவையை முன்னெடுக்கும் அரச அதிகாரிகளை அச்சுறுத்துவது மற்றும் பழிவாங்குவதும் உள்ளிட்ட செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் குறித்த அரச அதிகாரிகள் பலர் இடமாற்றங்களை சந்தித்துள்ளதுடன் ஒருசிலர் குறித்த தரப்பினரது கைப்பாவைகளாகவும் இருந்து செயற்படுவதால் மக்களின் சேவைகள் மட்டுமல்லாது அரச இயந்திரமுமம் ஒரு ஸ்திரமற்ற நிலையில் காணப்படுவதாகவும் பலதரப்பினரிடமிருந்தும் குற்றச்சாட்டுக்கள் குறித்து எனது கவனத்திற்கு நாளாந்தம் வருகின்றன.
அதேநேரம் நான் அரச அதிகாரிகளை மக்களின் நலனிலிருந்தே இன்றுவரை பார்த்து வருகின்றேனே தவிர அதிகாரிகளை பழிவாங்கியதோ அசௌகரியங்களுக்கு உட்படுத்தியதோ கிடையாது. ஆனால் இன்று சிலர் அரச அதிகாரிகளை சுதந்திரமாக செயற்படுவதற்கு இடையூறாக உள்ளனர் என்பது கவலைதரும் ஒன்றாக உள்ளது.
நான் தமிழ் மக்களுக்கான உரிமை போராட்டத்தில் நேரடியாக தலைமை தாங்கிய ஒருவன். அதேநேரம் அரசியல் நீரோட்டத்திற்கு வந்தபின்னர் பலதரப்பட்டவர்களது இடையூறுகள் கொலை அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பெரும் நெருப்பாற்றை கடந்து வந்தவன். அந்த காலகட்டங்களில் தான் நான் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்று மக்களின் நலன்களை பாதுகாத்து ஒருவன்.
இதனால்தான் நான் கடந்த 27 ஆண்டுகளாக நாடாளுமன்றை தமிழ் மக்களின் சார்பாக யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து தொடர்ச்சியாக பிரதிநிதித்துவம் செய்து வருகின்றேன்.
என்னை எனது மாவட்ட மக்கள் எனது நலனுக்காக அன்றி தமது நலன்களுக்காகவே இவ்வாறு தொடர்ச்சியாக நாடாளுமன்றம் அனுப்பிவருகின்றனர்.
ஆனால் இன்று யார் கூடுதலாக பொய் சொல்லுகின்றார்களோ அல்லது யார் கூடுதலாக பணம் செலவழிக்கின்றார்களோ அல்லது யார் மக்களை ஏமாற்றுகின்றார்களோ அவர்களே அதிக வாக்குகளை பெறும் நிலை காணப்படுகின்றது. இதனால் தான் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற வாய்ப்பேற்பட்டுள்ளது.
அந்தவகையில் இது தொடர்பில் நிச்சயமாக விரைவில் காத்திரமான நடவடிக்கை எடுக்க உள்ளேன் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் அங்கஜன் இராமநாதனின் குடும்ப தொலைக்காட்சியான கப்பிடல் தொலைக்காட்சியின் செய்தி அறிக்கையில் கிளிநொச்சி மாவட்ட வீட்டுத் திட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா பாரிய மோசடி செய்ததாகவும் அவருடன் இணைந்து அரச அதிபரும் அதை முன்னெடுத்துள்ளார் என்றும் தெரிவித்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் அரச நிர்வாகத்தில் அங்கஜன் மேற்கொள்ளும் அடாவடி குறித்து டக்ளஸ் தோனந்தா நல்லூர் பிரதேச செயலகத்தில் பகிரங்கமாக பேசியதை தொடர்ந்து அங்கஜனின் குடும்ப தொலைக்காட்சி அப்படியொரு செய்தியை வெளியிட்டிருந்தது.
அந்த செய்தி குறித்து பதிலளித்த போது,
இதை நான் முழுமையாக மறுக்கின்றேன். அவ்வாறு செயற்படுத்தும் தேவை ஒருபோதும் எனக்கிருந்ததில்லை. ஆனால் இது அரசியல் உள்நோக்கத்துடன் சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பில் நான் ஆராய்ந்தபோது கடந்தகாலத்தில் இருந்த ஒருங்கிணைப்பு குழு தலைமை செய்ததாக தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த செய்தியை தவறானது என்றும் அதை தெளிவுபடுத்தி குறித்த தொலைக்காட்சிக்கு எதிராக அதன் நிறுவனருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
இது என்னை மட்டுமல்லாது அந்த அரச அதிகாரியையும் மாசுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.