நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு – தேசத்திற்கு வெளிச்சம் எனும் தொனிப்பெருளில் மின்சார வசதியற்ற சமுர்த்திப்பயனாளிகளுக்கு இலவச மின்சாரவசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் இன்றுமட்டக்களப்பு கிரான் கோரளைப்பற்று மேற்கு பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டான்சேனைப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட (10குடும்பஙகளுக்கான) மின்சார வசதி இல்லாத சமுர்த்திப் பயனாளிகளக்கு இலவச மின்சாரம் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்பநிகழ்வு இடம்பெற்றது.
கிரான் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பிரதேசசபை உறுப்பினர் ந.திருநாவுக்கரசு , முற்போக்கு தமிழர் கட்சியின் இணைப்பாளர் எஸ்.சுஜானந்த் மற்றும் சமுர்த்தி, மின்சாரசபை உத்தியோகத்தர்கள் உட்பட பொது மக்களென பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தற்போது இந்த கொரோனா சூழ்நிலையிலும் நடைபெறுகிறது, நாட்டிலே பொருளாதாரத்தில் பாரிய சவால்கள் உள்ளது. இந் நிலையிலும் அரசாங்கம் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனைவின் தேசிய அமைப்பாளர் பொருளாதார புத்தெழுச்சி வறுமை ஒழிப்பிற்கான தலைவருமாக இருக்கின்ற பஷில் ராஜபக்ச அவர்களின் எண்ணக்கருவில் நடைமுறை அமுலாக்கலில் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அனைவருக்கும் மின்சாரம், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படவுள்ளது.
ஐந்து ஆண்டு செயற்றிட்டத்திலே குடிநீர் இல்லாத அனைவருக்குமான குடிநீர் வசதிகள் இவ் வேலைத்திட்டங்கள் அனைத்தும் தற்போது வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வீட்டுத்திட்டங்கள், மலசலகூடத் திட்டங்கள் இவ்வாறு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெறுகிறது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இவ் வேலைத்திட்டங்களை முடிந்தளவு நாங்கள் மக்கள் காலடிக்கு கொண்டு வரவேண்டும்.
நாம் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட போது பலர் கூறினார்கள் மொட்டுச்சின்னத்தில் வெற்றிபெற முடியாதென. தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவர் மொட்டுச்சின்னத்தில் எவ்வாறு வெற்றி பெறுவது என்று, பலர் அப்படித்தான் பேசுவர்கள். எம்மைப் பொறுத்தளவிற்கு வடகிழக்கில் மொட்டுச் சின்னத்தில் நேரடியாக போட்டியிட்டு நாங்கள் வெற்றிபெற்றோம். எமக்கு வெற்றியை தந்தவர்கள் இந்த மக்கள். இந்த மக்களின் பிரச்சினைகள் நிறைவேற்றப்படும் போதுதான் அவர்களது முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடியும். அதை நாம் நிறைவேற்றுபவர்கள்தான் மக்கள் தலைவர்களாக இருக்க முடியும்.