பிரஜா சக்தி மூலம், ‘பிரஜா சக்தி தொழிற்சாலை’ நிறுவப்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்திலும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயற்றிட்டத்திற்கு 15 வருட பூர்த்தியினை முன்னிட்டு நேற்று (18) மாலை அட்டன், டிக்கோயா வனராஜா பகுதியில் பிரஜாசக்தி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரஜாசக்தி செயற்திட்ட பணிப்பாளர் நாயகமும், சட்டத்தரணியுமான பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் 15 வருட பூர்த்தியினை முன்னிட்டு இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், பிரஜா சக்தி நிலையத்தில் தையல் பயிற்சி பெற்ற 30 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் மாணவர்கள் மற்றும் பிரஜசக்தி நிலைய பயிலுநர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி வருகின்றோம். ஒரு வருடம்கூட ஆகவில்லை, பல்கலைக்கழகம், ஆயிரம் ரூபா போன்ற உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்ததாக வேலையிண்மை பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். ஒரிருவருக்கு வேலை வழங்குவது என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அல்ல. தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படவேண்டும். அந்தவகையில் பிரஜா சக்திமூலம் ‘பிரஜா சக்தி’ தொழிற்சாலை அமைக்கப்படும். முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
அதேபோல கண்டி, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். பிரஜா சக்திமூலம் பல திட்டங்களை முன்னெடுக்கலாம். அதன் பணிப்பாளராக செயற்படும் பாரத் அருள்சாமிக்கு எமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வழிகாட்டிகளாக இருப்பார்கள்.
20 பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளன. நாமும் நீதிமன்றம் சென்றுள்ளோம். எது எப்படி இருந்தாலும் ஆயிரம் ரூபா கிடைக்கும். தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவார்கள்.” என்றார்.
–க.கிஷாந்தன்-