தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்துக்குத் தடை கோரிய வழக்கில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த புல்லட் பிரபு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
“நடிகர் தனுஷ் நடித்து வெளியாக உள்ள கர்ணன் திரைப்படத்தின் பாடல் ஒன்றில் ’பண்டாரத்தி – சக்காளத்தி’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் பண்டாரம், ஆண்டிப் பண்டாரம், ஜங்கம், யோகிஸ்வரர் ஆகிய சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த வார்த்தைகளால் பண்டாரம் சமுதாய மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, கர்ணன் திரைப்படத்தின் பாடலில் உள்ள பண்டாரத்தி- சக்காளத்தி வார்த்தைகளை நீக்கவும், சமூக வலைதளங்களில் இருந்து பண்டாரத்தி- சக்காளத்தி பாடலை நீக்கவும், அதுவரை கர்ணன் படத்தைத் திரையிடத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக சினிமா தணிக்கை அலுவலர், கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.