நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனத்தைப் பறிப்பது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்குமாறு நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை, மார்ச் 19ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயதுன்ன கொரியா ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த உத்தரவை பிறப்பித்தது.
சிறைவாசம் காரணமாக தனது நாடாளுமன்ற ஆசனத்தை பறிப்பதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவைக் கோரி எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தில் சட்டமா அதிபரைப் பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தெமுனி டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கைக்கு சட்டபூர்வமான எந்த அடிப்படையும் இல்லை என்று கூறினார்.
அதன்படி மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு அவர் கோரியுள்ளார்.
இருப்பினும், ரஞ்சன் ராமநாயக்கவை பிரதிநிதித்துவப்படுத்தியசட்டத்தரணி பைஸர் முஸ்தபா, நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கவின் சிறைத் தண்டனை நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் வழங்கப்பட்டது, இது ஒரு குற்றவியல் குற்றச்சாட்டு அல்ல. எனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் ரஞ்சனின் நாடாளுமன்ற ஆசனத்தை நீக்க முடியாது. அவர் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நீடிக்க முடியும் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, பெப்ரவரி 2 ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, அவரது நாடாளுமன்ற ஆசனம் பறிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இந்த மனுவை தாக்கல் செய்தார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனவரி 12 ஆம் திகதி, நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.