இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துதல் தொடர்பான கோரிக்கையை முன்நிறுத்தி லண்டன் நகரில் அம்பிகை அம்மணியினால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 11ம் நாளாகவும் தொடர்கின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரியக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தா.பிரதீபன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் திருமதி நா.தர்சினி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் பு.துசானந்தன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பிரதேச இளைஞர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும், அரசியற் கைதிகளின் விடுதலை செய்யப்பட வேண்டும், தொல்லியல் செயலணிக்கூடாக தமிழர்கள் பிரதேசத்தில் நடாத்தப்படுகின்ற அத்துமீறல்கள், காணி அபகரிப்புகள் போன்றவற்றை நிறுத்த வேண்டும். எமது மக்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை சர்வசேத்திடம் முறையிடுவது, இலங்கை அரசிற்கு ஐநா வழங்கியிருந்த உள்ளக விசாரணைப் பொறிமுறை, கலப்பு நீpமன்றம், மாறுகால நீதி போன்ற சகல விடயங்களையும் தவறவிட்டதன் காரணமாக நாங்கள் ஐநா விடமும், சர்வதேசத்திடமும், சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திடமும் எமக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்றவாறான கோரிக்கைகள் தொடர்பில் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.