தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் அதிபர் விடுதி பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் சின்னம் என தொல்பொருள் திணைக்களத்தினால் அறிவித்தல் பலகை நாட்டப்பட்டுள்ளது. அந்த காணியை அடாத்தாக பிடிக்க முயலும், இலங்கை அமெரிக்க மிசன் திருச்சபையின் பாதிரியார்களே இதன் பின்னணியில் செயற்பட்டதாக பாடசாலை சமூகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் அதிபர் விடுதி காணி 1816ஆம் ஆண்டு முதல் கல்லூரியின் பராமரிப்பில் இருந்து வருகிறது. பாடசாலையின் அதிபர்கள் அங்கு தொடர்ந்து தங்கி வந்தனர்.
மீண்டும் 2000களின் பின்னர் பாடசாலையின் பாவனையில் இருந்து, அண்மைக்காலமாக மீண்டும் பாதிரியார்களின் பாவனையில் அந்த கட்டிடம் இருந்துள்ளது.
இந்த நிலையில், அண்மையில் கட்டிடத்தில் பாதிரியார்கள் திருத்த வேலை செய்ய முயன்றபோது, பாடசாலை நிர்வாகத்தின் அனுமதியை அவர்கள் பெறவில்லை. இதனால் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, கட்டிடத்தை தம்மிடம் மீள ஒப்படைக்கும்படி பாடசாலை நிர்வாகம் கோரியது. பாதிரியார்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்க, பாடசாலை நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது.
அந்த காணி பாடசாலைக்குரியது என்று தெளிவான காணி ஆவணங்கள் உள்ளன. பாதிரியார்களிடம் எந்த காணி ஆவணமும் இல்லாமல் அடாத்தாக அதை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பில் ஆராய பாடசாலை நிர்வாகம், அமெரிக்க மிசன் திருச்சபையினரை உள்ளடக்கிய கலந்துரையாடலை வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஏற்பாடு செய்தார். ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பாதிரியார்கள், அடுத்து கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
பிரதேச செயலாளர், மாவட்ட நில அளவையாளர் திணைக்களம் என்பன அந்த காணி பாடசாலைக்குரியது என உறுதி செய்துள்ளனர். இதனடிப்படையில், அந்த காணி பாடசாலைக்குரியது, பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு உரிய செயற்பாடுகளை செய்யலாமென பாடசாலை நிர்வாகத்திற்கு, வடக்கு கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்தார்.
நாளை (15) பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ளதால், அந்த காணியை இன்று பாடசாலை நிர்வாகத்தினர் சிரமதானம் செய்தனர். அங்கு வந்த பாதிரியார்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிரமதானத்தின் போதே, அதிபர் விடுதி கட்டிடத்தில் தொல்பொருள் திணைக்களம் நாட்டிய அறிவித்தல் பலகையை பாடசாலை நிர்வாகத்தினர் கண்டனர்.
அந்த கட்டிடத்தை பாடசாலை நிர்வாகம் மீண்டும் கைப்பற்றாமல் இருப்பதற்காக, தொல்பொருள் திணைக்களத்தினரிற்கு பாதிரியார்களே அறிவித்து, அது பாதுகாக்கப்பட்ட கட்டிடமாக அறிவித்தல் நாட்டப்பட்டுள்ளது.
தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், 100 வருடத்திற்கு மேற்பட்ட கட்டிடம் என்பதால் பாதுகாக்கப்பட்ட கட்டிடமாக அறிவித்தல் பலகை நாட்டியதாக தொல்பொருள் திணைக்களம், பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளது.
அத்துடன், பாடசாலை நிர்வாகம் அமைத்த வாயில் கதவையும் பாதிரியார்கள் பூட்டு போட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
பாடசாலை நிர்வாகம் நாளை காலை தொல்பொருள் திணைக்களத்திற்கு சென்று, பாடசாலைக்குரிய காணியென்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவுள்ளனர்.
தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளில் சிறுபான்மையின மக்கள் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பாதிரியார்களின் செயற்பாடு அந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.