25.6 C
Jaffna
December 23, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

இறால்… விதவிதமான சில சமையல்கள்!

இறாலுக்கென்று தனிச்சுவை உண்டு.அத்துடன், சத்துகளும் இறாலில் நிறைந்து காணப்படுகின்றன. இறாலில் அதிக அளவு புரதமும் விற்றமின் டி சத்தும் அடங்கியுள்ளன. இதில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால், எடை குறைக்க விரும்புபவர்கள் இறாலை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எடை குறைப்பதில் மட்டுமல்ல… சருமப் பொலிவுக்கும் இறால் உதவுகிறது. கூந்தல் உதிர்வைத் தடுப்பதிலும் இறாலுக்குப் பங்குண்டு. இறாலிலுள்ள அன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பலவிதங்களிலும் நலம் பயப்பவை.

பார்வைச் சிதைவைத் தடுப்பதிலும், மூப்புத் தோற்றத்தைத் தள்ளிப்போடுவதிலும், எலும்பு ஆரோக்கியத்திலும்கூட இறால்கள் பெரிதும் பங்காற்றுகின்றன.

இப்படியாக சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த இறாலைக் கொண்டு செய்யக்கூடிய சிலவகை உணவுகளின் சமையல் குறிப்புகள் இவை-

இறால் மோமோஸ்

தேவையானவை:

இறால் – ஒரு கப் (கொத்தியது)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
மேல் மாவுக்கு:
மைதா – முக்கால் கப்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை:

மைதாவுடன் எண்ணெய், உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர்விட்டு மாவாகப் பிசையவும். மூடி போட்டு மாவை 30 நிமிடங்கள் தனியே வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் இறாலுடன் இஞ்சி, வெங்காயத்தாள், வெங்காயம், உப்பு சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். மாவை சிறிய, ஒரே அளவான உருண்டைகளாக உருட்டி ஈரத்துணியில் மூடி தனியே வைக்கவும்.

ஓர் உருண்டையை எடுத்து லேசாக மாவு தூவிய பலகையின் மேல் வைத்து 2-3 இன்ச் விட்டமுள்ள வட்டமாகத் தேய்த்துக் கொள்ளவும். வட்டத்தின் நடுவில் இறால் கலவையை வைக்கவும். அதை விருப்பமான வடிவில் செய்துகொள்ளவும். இதேபோல் மற்ற மோமோக்களைத் தயார் செய்து, ஆவியில் வேக வைக்கத் தயாராகும் வரை ஈரத்துணியால் மூடி வைக்கவும். பிறகு இட்லி குக்கரில் வைத்து 5 – 6 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.

இந்த மோமோக்கள் தயாரித்த பிறகு டிரான்ஸ் பரென்ட்டாக இருக்கும். அதாவது அவற்றின் உள்ளே இருப்பது வெளிப்படையாகத் தெரியும். இதை சோஸ் அல்லது காய்ந்த மிளகாய் பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.

இறால் கஞ்சி

தேவையானவை:

அரிசி – ஒரு கப்
தண்ணீர் – 8 கப்
இறால் – 250 கிராம் (சுத்தம் செய்து, நரம்பு நீக்கவும்)
துருவிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு டேபிள்ஸ்பூன்
கார்ன் ஸ்டார்ச் (சோள மாவு) – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

டாப்பிங் செய்ய:

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்
இறால் – 250 கிராம் (சுத்தம் செய்து, நரம்பு நீக்கவும்)
மஷ்ரூம் – 100 கிராம் (துண்டுகளாக்கவும்)
மிளகுத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

அலங்கரிக்க:

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு

செய்முறை:

இறால், இஞ்சி, வெங்காயத்தாள், கார்ன் ஸ்டார்ச் ஆகியவற்றை ஒரு சின்னக் கிண்ணத்தில் சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்துக் கலந்து, கொதிக்கவிட்டு, தீயைக் குறைத்து அடிக்கடி கிளறவும். அரிசி கிட்டத்தட்ட வெந்த பிறகு இறால் கலவையைச் சேர்க்கவும். இறால் வெந்து கலவை (கஞ்சி) கெட்டியாகும் வரை மேலும் சிறிது நேரம் வேகவிடவும். நல்லெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி தனியே வைக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவிட்டு இஞ்சி சேர்த்து மஷ்ரூம், இறால் சேர்க்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். வேகும் வரை கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். கஞ்சியை ஒரு சிறிய பவுலில் சேர்த்து மேலே மஷ்ரூம் – இறால் டாப்பிங், நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

இறால் கேனபேஸ்

தேவையானவை:

வெள்ளரிக்காய் – 3-4
எண்ணெய் – 2 டீஸ்பூன்
இறால் – 15 (நரம்பு நீக்கியது)
ஸ்வீட் சில்லி சோஸ் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

இறால் – அவகாடோ டிப் செய்ய:

அவகாடோ – 2 (மசிக்கவும்)
வேகவைத்த இறால் – 15 (பொடியாக நறுக்கியது)
மயோனைஸ் – 3-4 டேபிள்ஸ்பூன்
தக்காளி – ஒன்று (விதை நீக்கிப் பொடியாக நறுக்கவும்)
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

டிப் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு நரம்பு நீக்கப்பட்ட இறால், ஸ்வீட் சில்லி சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். இறால் வெந்ததும் கடாயிலிருந்து எடுத்து தனியே வைக்கவும். வெள்ளரிக்காயை வட்டமாகவோ, குறுக்காகவோ வெட்டி தனியாக வைக்கவும்.

ஒரு வெள்ளரிக்காய் துண்டு எடுத்து, மேலே `இறால் – அவகாடோ டிப்’பைப் பரப்பி, அதன் மேலே வாட்டிய இறால் துண்டு வைத்துப் பரிமாறவும். எல்லா வெள்ளரிக்காய் துண்டு களிலும் இதே போல் செய்து கொள்ளவும். ராய்த்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

இறால் கீரை அடை

தேவையானவை:

கடலைப்பருப்பு – கால் கப்
பயத்தம்பருப்பு – கால் கப்
துவரம்பருப்பு – கால் கப்
மைசூர் பருப்பு (masoor dal) – கால் கப்
அரிசி மாவு – கால் கப்
காய்ந்த மிளகாய் – 3
சீரகம் – ஒரு டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/3 கப்
இஞ்சி – சிறிய துண்டு (தோல் சீவவும்)
இறால் – 250 கிராம்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கீரை இலைகள் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

பருப்புகளை காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துக் கழுவி, நீரில் ஊறவைத்து, நைஸாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய், இறால், இஞ்சியைத் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரிசி மாவுடன், கீரை, கொத்தமல்லி இலை, அரைத்த பருப்பு கலவை, இறால் கலவை, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதை அடை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

தோசை தவாவைச் சூடாக்கி, ஒரு கரண்டி மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய்விட்டு தோசை போல இருபுறமும் சுட்டெடுக்கவும். மீதமுள்ள மாவையும் இதேபோல் செய்யவும். தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

பீட்டல் லீவ்ஸ் வ்ராப்ட் இறால்

தேவையானவை:

வெற்றிலை – 10
இறால் – ஒன்றரை கப் (கொத்தியது)
பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லி இலை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

 

ஒரு பவுலில் இறாலை எடுத்துக்கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து தனியே வைக்கவும். வெற்றிலையைத் தண்டுப் பகுதி கீழ் நோக்கி இருக்கும்படி தட்டில் வைக்கவும்.

இறால் கலவையைச் சிறிதளவு எடுத்து சிறிய சோசேஜ் (sausage) போல செய்துகொள்ளவும். இதை வெற்றிலை ஓரத்தில் வைத்து மெதுவாக உருட்டவும். இறால் கலவை வெளியே வராதவாறு பார்த்துக்கொள்ளவும். நிரப்பப்பட்ட வெற்றிலையை சீல் செய்து உருளை வடிவம் பெற தண்டைப் பயன்படுத்தவும். இரண்டு ஸ்கீவர்களை எடுத்து வெற்றிலை ரோலை குத்தவும். மீதமுள்ள வெற்றிலைகளை இதேபோல் செய்து அதே ஸ்கீவர்களைக் குத்தவும்.

இறால் துவையல்

தேவையானவை:

பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்)
பூண்டு – 4-5 பல் (நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய இஞ்சி – 2 டேபிள்ஸ்பூன்
இறால் – 250 கிராம் (சுத்தம் செய்து நரம்பு நீக்கவும்)
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5-6 (அல்லது ருசிக்கேற்ப)
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

இறாலுடன் மஞ்சள்தூள் சேர்த்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அது லேசான பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கி கொத்தமல்லி இலைகள், இறால் சேர்த்துக் கிளறி நன்கு வேகவைக்கவும். இந்தக் கலவையை ஆறவிட்டு, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment