ஒடிசா சட்டசபையில் ‘கிருமிநாசினி’ குடித்து பாஜக எம்எல்ஏ தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
ஒடிசாவில் சட்டச்பைபட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை சந்தையில் கொள்முதல் செய்வதில்லை என்ற புகார் தொடர்பாக அவையில் விவாதிக்கப்பட்டது. அப்போது ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்களுக்கும், பாஜக எம்எல்ஏக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் சபாநாயகர் சூர்யநாராயண பத்ரா, அவையை மாலை 4 மணி வரை ஒத்திவைத்தார்.
மீண்டும் மாலை 4 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கிய போது பாஜக எம்எல்ஏ பானிகிராஹி, நெல் கொள்முதல் குறித்து பேச அனுமதிக்கும்படி சபாநாயகரிடம் நேரம் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்தார். ஆனால், சபாநாயகர் அனுமதிக்கவில்லை. கூச்சலிட்ட பாஜக எம்எல்ஏவை தனது இருக்கையில் அமரச் சொன்னார். இருந்தும் நெல் கொள்முதல் விஷயத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவைக்குள் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டில் விடுத்தார். அதன்பின், திடீரென தனது பாக்கெட்டில் வைத்திருந்த சானிடைசர் பாட்டிலை எடுத்து அதிலிருந்த கிருமிநாசினியை வாயில் ஊற்றி குடிக்க முயன்றார்.
அதிர்ச்சியடைந்த பாஜக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பானிகிராஹி கையில் இருந்த பாட்டிலை தட்டிவிட்டு தடுத்தனர். இருந்தும் சிறிதளவு கிருமிநாசினையை எம்எல்ஏ குடித்ததால், அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் ஒடிசா பேரவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவை நடவடிக்கைகளும் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டன. அவையில் எம்எல்ஏ ஒருவர் சானிடைசர் குடித்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.