கொரோனா தொற்றினால் இடைநிறுத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மடு தேவாலய பகுதிகளில் யாத்திரைக்காக வருகை தரும் யாத்திரிகர்களுக்கான தங்குமிட விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (11) மாலை 3.30 மணியளவில் சுற்றுலா துறை அமைச்சின் ஏற்பாட்டில் மடு பிரதேசத்தில் இடம் பெற்றது.
இந்திய அரசின் நன்கொடையின் கீழ் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 144 வீடுகளை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு அமைக்க மேற்படி அடிக்கள் நாட்டி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,
யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவையை மீள தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சுற்றுலா பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இது செயற்படுத்தப்படும். அதேபோல, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்மலானைக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் செயல் படுத்தப்பட்ட நிலைமாற்று வீடமைப்புத்திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவெல் பெர்னாண்டோ ஆண்டகை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க , பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,காதர் மஸ்தான், கே.திலீபன்,இலங்கைக்கான இந்திய துணைதூதுவர் எஸ்.பாலசந்திரன் , உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
-இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயரின் ஆசீர் வாதத்துடன் நிலைமாற்று வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் வருகை தந்த அதீதிகளினால் வைபவ ரீதியாக நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.