மண்முனை பிரதேச சபைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி நகரசபையின் மூலம் சுற்று மதில் அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அச் செயற்பாட்டிற்கு மண்முனை பிரதேச சபையினால் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மண்முனை பிரதேச சபையின் உறுப்பினர்களும், ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து இன்றைய தினம் மண்முனை பிரதேச சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வார்;ப்பாட்டத்தில் சபையின் முன்னாள் தவிசாளர் மகேந்திரலிங்கம் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
பதவி மோகத்தால் எமது நிலங்களைத் தாரைவார்க்காதே, எமது பிரதேச சபை எல்லைக்குள் காத்தான்குடி நகரசபையே மூக்கை நுழைக்காதே, எமது விளையாட்டு மைதானம் எமக்குரியதே, ஆக்கிரமிக்காதே ஆக்கிரமிக்காதே எமது பகுதியை ஆக்கிரமிக்காதே, தவிசாளர் பதவிக்காக மண்ணை விற்காதே, இனமுரண்பாட்டைத் தோற்றுவிக்கும் செயலை நிறுத்து போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
காத்தான்குடி ஆரையம்பதி பிரதேச எல்லையில் அமைந்துள்ள திருநீற்றுக்கேணி விக்டர் விளையாட்டு மைதானமானது மண்முனைப் பற்றுப் பிரதேச செயலகத்திற்குரிய அரச காணியாக இருந்து பின்னர் பிரதேச செயலாளரினால் உத்தியோக பூர்வமாகப் பிரதேச சபைக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொது அம்மைதானத்தில் காத்தான்குடி நகரசபையினால் சுற்று மதில் அமைக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது. இது சட்ட நடைமுறைக்கு முரணான விடயம். எமது பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் எமது சபையின் அனுமதியின்றி இன்னுமொரு சபையினால் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதென்பது எதிர்காலத்தில் அம் மைதானம் காத்தான்குடி நகரசபைக்குச் சொந்தமானது என அவர்கள் சொந்தம் கொண்டாடுவதற்கு ஏதுவாக அமைந்து விடும்.
இவ்வாறு எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது தொடர்பில் நாங்கள் பிரதேச சபைத் தவிசாளரிடம் தெரிவித்தும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதனாலேயே இன்றைய இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டோம். இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள், பிரதேச சபைத் தவிசாளார் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய கவனம் எடுத்து எமது பிரதேச சபைக்குச் சொந்தமான நிலத்தில் அத்துமீறிய செயற்பாடுகளை மேற்கொள்வதைத் தடுத்து அதனை மீட்டுத் தரவேண்டும் என்று தெரிவித்தனர்.
பின்னர் மண்முனைப் பற்றுப் பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலாளருடன் இது தொடர்பில் கலந்துரையாடியதுடன்,இவ்விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதேச சபைத் தவிசாளரிடமும் மேற்படி விடயங்கள் தொடர்பிலான மகஜர் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பில் பிரதேச சபைத் தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில், மேற்படி விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருப்பதாகவும், மேலும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் எடுப்பதற்கு ஆவன செய்வதாகவும் தெரிவித்தார். அத்துடன் மேற்படி விளையாட்டு மைதானப் பிரச்சினை 2005ம் ஆண்டு காலம் தொடக்கம் இருந்து வருகின்றது. நான் தற்போதுதான் தான் சபையினைப் பொறுப்பெடுத்திருக்கின்றேன். இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன் எனவும், இவ்விளையாட்டு மைதானம் இன்னும் உத்தயோகபூர்வமாக பிரதேச சபைக்குக் கையளிக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை எவ்வித ஆவனங்களும் இல்லை எனவும், அது தொடர்பில் பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பிலேயே ஆவனங்கள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.