யாழ் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்களை கூண்டோடு மாற்றம் செய்து, யாழ்ப்பாண அரச அதிபர் பாணியில் தமது சொல் பேச்சு கேட்கும் “பொம்மை“ நிர்வாகத்தை ஏற்படுத்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகீரத பிரயத்தனம் மேற்கொள்கிறார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் என்ற கோதாவில் அப்பா, சித்தப்பா, மாமா, மச்சான் என மாவட்ட செயலகத்திற்குள்ளேயே குடும்ப அரசியலை மேற்கொள்வதாக ஏற்கனவே விமர்சனம் எழுந்திருந்தது.
இந்த போக்கு வளர்ந்து, கிராம மட்டங்களில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர் என்ற பெயர்களில் உலாவித்திரியும் அள்ளக்கைகள், அரச உத்தியோகத்தர்களை அதட்டுவது, நிகழ்வுகளிற்கு தம்மை அழைக்க வேண்டுமென மிரட்டுவது என அட்டகாசம் புரிந்து வருகிறார்கள்.
மாவட்ட நிர்வாகத்தில் தமக்கு தோதானவர்களை நியமிக்க அங்கஜன் தரப்பு மேற்கொண்ட முயற்சியில் முதலில் தலை உருண்டது, அப்போதைய யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரச அதிராக இருந்தவர். அவர் இடமாற்றம் செய்யப்பட்டு, தமக்கு தோதான ஒருவரை நியமிக்க ஏற்பாடு செய்தனர்.
பின்னர் மாவட்ட நிர்வாகத்தில் பலர் அரசியல் பழிவாங்கலிற்கு உட்பட்டனர்.
கடந்த பொதுத்தேர்தலில் அங்கஜன் இராமநாதனின் குடும்பத்திற்கு சொந்தமானது என கருதப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தேர்தல் விதிமீறல் இடம்பெற்ற போது, அந்த இடத்திற்கு சென்று சட்டத்தை அமுல்படுத்திய அதிகாரியொருவரும் அரசியல் பழிவாங்கலிற்கு உள்ளாகியவர்களில் ஒருவர் என செய்திகள் வெளியாகின.
வெளிப்படையான இடமாற்றங்கள் சர்ச்சையானதையடுத்து, அதிகாரிகள் மூலமாகவே, வேண்டாத அதிகாரிகளிற்கு தகவல் வழங்கப்பட்டு, அவர்கள் சுயமாகவே இடமாற்றம் பெற்று செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் வேலணை பிரதேச செயலாளராக இருந்த சோதிநாதன் இடமாற்றம் சர்ச்சையானது. அரச அதிகாரிகள் பந்தாடப்பட்ட போது, யாழ் மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மௌனமாக இருந்ததும் சர்ச்சையானது. அதிகாரிகள் பலர் அவரிடம் சென்று விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர், வேலணை பிரதேச செயலாளரை மாற்றுவதை தடுக்க டக்ளஸ் முயற்சி செய்தார்.
வேலணை பிரதேச செயலகத்தில் உள்ள அங்கஜன் அணியை சேர்ந்தவர் தனது வீட்டை இடித்து விட்டு இரண்டாது வீட்டை கோரிய போது அனுமதி கொடுக்காதது, நிவாரணம் வழங்கலில் அங்கஜனின் பெயர்ப்பட்டியலை உள்ளீர்க்காமை அவரது இடமாற்றத்திற்கான காரணமென அப்போது தகவல் வெளியாகியிருந்தது.
அந்த இடமாற்றத்தை டக்ளஸ் தேவானந்தா தடுக்க முயன்ற போது, வேலணை பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யாவிட்டால் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியை துறக்கப் போவதாக அங்கஜன், கோட்டா அரசிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இனிமேல் இடமாற்றங்களின் முன்னதாக உங்களுடன் கலந்துரையாடுகிறோம் என டக்ளஸ் தேவானந்தாவிடம் கூறிய தொடர்புடைய அமைச்சர், ஏற்கனவே வழங்கிய அறிவித்தலின்படி வேலணை பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்தார்.
இந்த நிலையில், நல்லூர் பிரதேச செயலாளர் டக்ளஸிற்கு ஆதரவாக செயற்படுவதாக குறிப்பிட்டு, அவரை இடமாற்றம் செய்ய அங்கஜன் தரப்பு முயன்றது.
எனினும், இடமாற்ற விவகாரங்களினால் கோபமடைந்திருந்த டக்ளஸ் தேவானந்தா முன்னெச்சரிக்கையாக செயற்பட்டு, இடமாற்றத்திற்கு செக் வைத்திருந்தார். சம்பந்தப்பட்ட அமைச்சரிற்கு பிரதமர் சில அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து புதிய முயற்சியொன்று மேற்கொள்ளப்படுகிறது.
உள்ளூராட்சி அமைச்சின் முக்கிய அதிகாரியொருவர் மூலம் இடமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தனியொருவரை மாற்றுவதால் சிக்கல் ஏற்படும் என கருதி, மாவட்டத்திலுள்ள அனைத்து அதிகாரிகளையும் மாற்ற முயற்சிக்கப்படுகிறது. இதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரி, மாவட்டத்திற்கு வெளியில் உள்ள பிரதேச செயலாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்று செல்ல விரும்புகிறீர்களா என கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.