யார் எவ்வாறான குற்றம் செய்தார்கள் என்பது தெளிவற்ற நிலையில், பரிபாலனசபையினரை நீதி மன்றில் தோன்றுமாறு அறிவித்தல் வழங்குமாறு கோருவது முதிர்ச்சியடையாத விண்ணப்பம் என்று தாம் ஆட்சேபித்தாக சட்டத்தரணி கே.சயந்தன் தெரிவித்தார்.
வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் இன்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வெடுக்குநாறி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், முன்னைய வழக்கினை போலவே தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தினார்கள் என்றவாறான சுமத்துதல்கள் செய்யப்பட்டு ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்ட, “பி”அறிக்கைக்கு மேலதிகமாக மேலும் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு அழைக்கப்பட்டபோது ஆலயத்தின் தலைவர், செயலாளரை நீதிமன்றில் பிரச்சன்னமாகுமாறு அறிவித்தல் அனுப்புமாறு பொலிசார் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார்கள். அத்துடன் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவேண்டியிருப்பதாகவும் விண்ணப்பம் செய்திருந்தனர்.
அந்தவகையில் புரியப்பட்ட குற்றம் என்ன, அதை புரிந்தவர்கள் யார், அவர்களிற்கு எதிராக எவ்வாறான சாட்சியங்கள் இருக்கிறது போன்ற விடயங்கள் தெளிவற்று இருக்கின்றமையே வழக்கு தொடுநர்கள் சட்டமாஅதிபரிடம் ஆலோசனையை பெறுவதற்கு காரணமாகவுள்ள நிலையில், பரிபாலன சபையினரை நீதி மன்றில் தோன்றுமாறு அறிவித்தல் வழங்குமாறு கோருவது ஒரு முதிர்ச்சியடையாத விண்ணப்பம் என்று நாங்கள் ஆட்சேபித்தோம். அந்தவகையில் பரிபாலனசபைக்கு அறிவித்தல் அனுப்பும் விண்ணப்பத்தை நீதவான் நிராகரித்தார். வழக்கு எதிர்வரும் யூன்மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கில் ஆலய நிர்வாகத்தினர்களான தமிழ்செல்வன், சசிகுமார், பூசகர் மதிமுகராசா ஆகியோர் நீதிமன்றிற்கு வருகைதந்த போதும், மன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை. அவர்கள் சார்பாக சட்டத்தரணி கே.சயந்தன், உட்பட பலர் முன்னிலையாகினர்.