முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன. முதற்கட்டமாக மருத்துவக் களப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேலுள்ள நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட இணை நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் பல மாநில முதல்வர்கள், முக்கிய விஐபிக்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (11) சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 924 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 3,606 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை மொத்தம் 36 லட்சத்து 14 ஆயிரம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. இதில், 30.47 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள், 5.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்.
இந்நிலையில், இதுவரை மொத்தமாக 11 லட்சத்து 25 ஆயிரத்து 703 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசியை 10 லட்சத்து 98 ஆயிரத்து 857 பேரும், கோவாக்சின் தடுப்பூசியை 26 ஆயிரத்து 846 பேரும் போட்டுக்கொண்டனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது நாம் பணி நிமித்தமாக, அத்தியாவசிய தேவைகளுக்காக, ஏதேனும் நிகழ்வுகளுக்காக வெளியில் செல்கிறோம். இப்படியான நேரத்தில் நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.