நீதி வேண்டும் எனக் கோரி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கோறளைப்பற்று தவிசாளர் ஆகியோர்களுக்கு எதிராக கண்டனப் பேரணி இடம்பெற்றது.
கோறளைப்பற்று பிரதேச சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் கண்டனப் பேரணியானது சபை அமர்வு முடிவடைந்த பின்பு வெளியில் வந்த எதிர் தரப்பு உறுப்பினர்கள் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் நீதி வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக நடந்து வந்து பிரதான வீதி வழியாக சபையின் முன்னால் சென்றடைந்தனர்.
கிழக்கின் ஆளுநரே, 2021 ஆம் ஆண்டிற்கான பாதீட்டை நிறைவேற்றாத தவிசாளரை நிருவாகம் செய்ய அனுமதிக்காதே, ஊழல் நிறைந்த தவிசாளருக்கு முறையான விசாரணை நடாத்துங்கள், சபையில் நடந்த நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு உடணடியாக விசாரணை செய்து தீர்வு தாருங்கள், முறையாக ஜனநாயக வழியில் தவிசாளரை தெரிவு செய்ய ஆவன செய்யுங்கள், பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை புறக்கணிக்காதே, கோறளைப்பற்று பிரதேச சபைக்கு மாத்திரம் தனியான உள்ளுராட்சி சட்டமா என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் தாங்கியவாறும், நீதி வேண்டும் என எழுதிய துணியை தலையில் கட்டியவாறும் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதேவேளை கோறளைப்பற்று பிரதேச சபையின் 37 வது சபை அமர்வு இன்று தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. தலைமை உரையைத் தொடர்ந்து கடந்த கால கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது. இதன்போது கடந்த 36 வது சபை அமர்வில் பேசப்படாத விடயங்கள் உள்ளடக்கப்ட்டதாக தெரிவித்து குறித்த கூட்டறிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதேபோன்று கடந்த 36 வது சபை அமர்வு தீர்மானத்தின்படி தவிசாளர் மீது நம்பிக்கை இன்மை காரணமாக அவர் ஊடாக கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள், பிரேரணைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில்லை என்ற முடிவின் பிரகாரம் இன்றைய 37 வது அமர்விலும் கடந்த அமர்வில் எடுக்கப்பட்ட முடிவின் படி எந்தவொரு பிரேரனைக்கும் ஆதரவு வழங்குவதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டதாக எதிர்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சபையில் அமளிதுமளி இடம்பெற்றது. தமிம் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை சேர்ந்த உறுப்பினர் பீதாம்பரம் எதிர்தரப்பு உறுப்பினருக்கு எதிராக துசித்து அருவருக்க தக்க வார்த்தை பிரயோத்தனை பயன்படுத்தியுள்ளார். இதனை கண்டித்த எதிர்தரப்பினர் குறித்த உறுப்பினரை சபை அமர்வினை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ளனர். அதன் பிரகாரம் அவர் வெளியேற்றப்பட்டார்.
சபையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் எந்தவொரு நாளாந்த செலவீனத்தையும் செலவிட அங்கீகாரம் வழங்கப்படவில்லையென எதிர்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.