சண்டிகரை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர், தனது கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சண்டிகரைச் சேர்ந்தவர் பிரியங்கா. போக்குவரத்து பிரிவில் கான்ஸ்டபிளாக இவர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்த நிலையில், பிரசவ விடுமுறை முடிந்து பணியில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று பணியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவர் பணிக்கு வரவில்லை.
இதையடுத்து, பிரியங்காவை தொடர்பு கொண்ட உயர் அதிகாரிகள், அவரை உடனடியாக பணிக்கு வரும்படி உத்தரவிட்டனர். வீட்டில் குழந்தையை பார்த்து கொள்ள யாரும் இல்லை, அதனால் தான் தன்னால் பணியில் மீண்டும் இணைய முடியவில்லை என விளக்கம் அளித்திருக்கிறார்.
இதனை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள், விடுமுறை முடிந்து விட்டதால், உடனடியாக பணியில் சேர வேண்டும் என தெரிவித்து விட்டனர்.
வேறு வழியில்லாமல், தனது குழந்தையை தூக்கி கொண்டு பணிக்கு சென்றுவிட்டார் பிரியங்கா. பச்சிளம் குழந்தையை இடுப்பில் வைத்து கொண்டு, போக்குவரத்து சீரமைப்பு பணியை மேற்கொண்டார். இதனை அங்கிருப்பவர்கள் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலானது. ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலம் அடைந்து விட்டார் பிரியங்கா.
தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்த பிரியங்காவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அதே சமயம், அவரது நிலையை புரிந்து கொள்ள மறுத்த அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.