அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.
இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாநகரசபையை கலைக்கும் முயற்சி பெரும் பணச்செலவில் நடந்து வருகிறது. நான் பதவியிழப்பது அல்லது உறுப்பினர்கள் பதவியிழப்பது மாநகரசபையை கலைக்க வழிவகுக்கும்.
இது ராஜபக்ச தரப்பு விரும்பிய, அவர்களின் நிகழ்ச்சி நிரலின்படி நடக்கும் சம்பவம். யாழ் பண்பாட்டு மையத்தை பொறுப்பேற்க ராஜபக்ச தரப்பு முயற்சித்தது. அதற்கு நாம் தடையாக இருக்கிறோம். ஆகவே ராஜபக்ச தரப்பு கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு, என்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வழக்குகளில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு எதிராக நாம் கடுமையாக போராடி வருகிறோம். என்னை முதல்வர் பதவியிருந்து நீக்க இதுவரை 50 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளனர். இதன் ஒரே நோக்கம் மாநகரசபையை கலைத்து ராஜபக்ச தரப்பின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுதான்.
மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப யாழ் மாநகர சபையினை கலைத்து அரசிற்கு சார்பாக இந்த மாநகர சபையை பொறுப்பேற்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு வருகின்றனர்.
எமக்கு எதிராக வழக்குகளை நடத்த மஹிந்த தரப்பினர் பணம் வழங்குகின்றனர். எமது கட்சியிலுள்ள சிலரே அதை செய்கிறார்கள். இதன்மூலம் இனத்தை அழிக்க வேண்டுமென முயற்சிக்கிறார்கள். 2019 இல் ராஜபக்ச தரப்பு வெல்ல வேண்டுமென துடித்தவர்கள்- எமது கட்சியிலுள்ள சிலர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.