பாம்பு உள்ளிட்ட விசமுள்ள ஊர்வனவற்றை பாத்திரமாக படித்து, பாதுகாப்பான இடங்களில் விடும் பாடசாலை மாணவியொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் மொலகொட பகுதியை சேர்ந்த 19 வயதான ஹசந்தி பாக்யா ஹிதிபந்தரம என்ற மாணவியே இவ்வாறு, தனது பகுதியில் பாம்பு உள்ளிட்டவற்றை வீடுகளில் இருந்து மீட்டு வருகிறார்.
ரம்புக்கன பின்னவல தேசிய பாடசாலையில் வர்த்தக பிரிவில் கல்வி பயின்று வரும் இவர், இதுவரை 70 இற்கும் அதிகமான பாம்புகளை பிடித்து காட்டில் விட்டுள்ளா். 200 இற்கும் அதிகமான ஊர்வனவற்றை மீட்டுள்ளார்.
அந்த பகுதியில் வீடுகள், கடைகள் மற்றும் வளாகங்களில் நுழையும் விஷம் மற்றும் அதிக விஷம் கொண்ட ஊர்வனவற்றை அவர் கைப்பற்றி, அவற்றை தீங்கு விளைவிக்காமல் வாழக்கூடிய ஒரு சுற்றுச்சூழல் அமைப்பில் விடுவிக்கிறார்.
அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார்.
அவரது பாட்டனார் அந்த பகுதியில் பிரபலமான சிங்கள பாரம்பரிய வைத்தியர். பாம்பக்கடிக்கு சிகிச்சையளிப்பதில் பெயர் பெற்றவர். பாம்புகள் மற்றும் விச உயிரினங்களால் தீண்டப்படும் கிராமவாசிகள் அவரிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள். தம்மை தீண்டிய விச உயிரினங்களை அவர்கள் எடுத்து வருவதால், அவர் சிறுவயது முதலே விச உயிரினங்களை கையாள தொடங்கினார்.
வீட்டுக்கு கொண்டு வரப்படும் உயிரினங்கள் சில நாட்கள் வீட்டில் வைக்கப்பட்ட பின்னர் காட்டில் விடப்படுகின்றன.
தாத்தாவிடமிருந்து பாரம்பரிய மருத்துவத்தை கற்ற ஹசந்தி, இப்பொழுது வீட்டுக்கு வரும் நோயாளிகளிற்கு மருந்து வழங்கி வருகிறார்.