உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை வெளிப்படுத்தக் கோரி இன்று இலங்கை கத்தோலிக்க சமூகம் கருப்பு ஞாயிறு தினத்தை அனுட்டிக்கும் என கர்தினல் மல்கம் ரஞ்சித் அறிவித்திருந்தார்.
ஞாயிறு ஆராதனைக்கு செல்பவர்கள் கருப்பு ஆடைகளுடன் சென்று, ஆராதனைகளின் பின்னர் தேவாலயங்களில் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, தென்னிலங்கை பகுதி தேவாலயங்களில் கருப்பு ஞாயிறு அனுட்டிக்கப்பட்டது. தேவாலயங்களில் ஆராதனை முடிந்ததும் போராட்டங்களும் நடந்தன.
எனினும், வடக்கு கிழக்கு பகுதிகளில் கருப்பு ஞாயிறு அனுட்டிக்கப்படவில்லை. வழக்கமான ஆராதனைகளின் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
யாழ் மறைமாவட்டத்தில் மாத்திரம், இரணைதீவில் உடல்கள் அடக்கம் செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடக்கு, கிழக்கில் கருப்பு ஞாயிறு ஏன் அனுட்டிக்கப்படவில்லையென தனது பெயரை குறிப்பிட விரும்பாத கத்தோலிக்க மதகுரு ஒருவர் சில தகவல்களை தெரிவித்தார்.
“கருப்பு ஞாயிறு தொடர்பில் சில தினங்களின் முன்னர் தொடக்கம் வடக்கு, கிழக்கு மறைமாவட்டங்களில் ஆராயப்பட்டது. எனினும், அதை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் விட்டுவிடுவதென்பதுதான் பெரும்பாலான கத்தோலிக்க மத தலைவர்களின் அபிப்பிராயமாக இருந்தது. வடக்கு, கிழக்கில் தொடர்ந்து தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கத்தோலிக்க மத குருமாரும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனினும், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை தெற்கு கத்தோலிக்க சமூகம் கண்டுகொள்வதில்லை. இதனால், கருப்பு ஞாயிறை அனுட்டிப்பதென்பதுதான் பெரும்பாலான மதகுருக்களின் நிலைப்பாடு“ என்றார்.