எதிர்கட்சியில் இருக்கும் போது எதுவும் கதைக்க முடியும். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனைதான் செய்கின்றார்கள். பாசிக்குடாவில் உல்லாச விடுதிகள் அமைக்க பிள்ளையான் காணி வழங்கினார் என்று கடந்த ஆட்சியில் எதிர்கட்சியில் இருந்து கூக்குரலிட்ட ஒருவர் தற்போது ஆளும்தரப்பில் இராஜாங்க அமைச்சராகவுள்ளார். அவரால் கடந்த காலத்தில் கூறியதுபோல் இப்போது கூறமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் ஐந்து வீடுகள் அமைக்கும் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பேத்தாழையில் முதலாவது வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
கொரோனா பிரச்சனைக்கு மத்தியில் அரசாங்கம் தமது கடமைகளை சரியாக செய்து வருகின்றது. இங்கு வீடுகள் அமைக்கும் திட்டத்தினை வழங்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த அரசாங்கம் வீட்டுத்திட்ட கிராமங்களை உருவாக்கியது. அதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றது. அதிலும் வசதி படைத்தவர்களுக்கு வழங்கியதாக முறைப்பாடுகள் காணப்பட்டது.
ஆனால் இந்த அரசாங்கம் குடிசை வீடுகளில் உள்ளவர்களை இனங்கண்டு வீடுகளை வழங்கி வருகின்றது. எனது மாவட்டத்தில் குடிசை வீடுகள் இருக்கக் கூடாது என்று ஆசைப்படுகின்றேன். இதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம். எதிர்கட்சியில் இருக்கும் போது எதுவும் கதைக்க முடியும். சாணக்கியன் அதனை செய்கின்றார். வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தினை பற்றி பேசுகின்றார். மீன்பிடித் துறைமுகம் யாரது ஆட்சியில் கட்டப்பட்டது அதன் வரலாறு என்ன என்று அவருக்கு என்ன தெரியும்.
அதேபோன்றுதான் கடந்த ஆட்சியில் எதிர்கட்சியின் இருந்த இப்போதைய இராஜாங்க அமைச்சர் கூறினார், பாசிக்குடாவில் உல்லாச விடுதிகள் அமைக்க பிள்ளையான் காணி வழங்கினார் என்று. தனது அரசியலுக்காக பேசித்திரிந்தார். தற்போது ஆளுந்தரப்பில் இருக்கின்றார். இப்போது அவர் ஆரம்ப காலத்தில் பேசியதைப்போல் எதிர்பு அரசியல் செய்யமாட்டார். செய்யவும் முடியாது. அரசியல் ரீதியான பிரச்சனைகள் இருக்கலாம். மக்களுக்கு எமது அரசியல் காலத்தில் என்ன செய்துள்ளோம் என்பதுதான் முக்கியம்.
பேத்தாழை கிராமம் கடந்த கால நல்லாட்சி அரசாங்கத்தில் கவனிக்காமல் உள்ளதால் வடிகான் வசதியின்மை காரணமாக இங்கு டெங்கு தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஒருவர் மரணமடைந்தும் உள்ளார். கொரோனா தொற்றில் எமது பகுதியில் மரணம் ஏற்படவில்லை. டெங்கினால் மரணம் ஏற்பட்டுள்ளது.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், செயலக உத்தியோகத்தர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.