இலங்கையின் மனித உரிமை ஆர்வலரும், சட்டத்தரணியுமான ரனிதா ஞானராஜா, அமெரிக்கா இராஜாங்க திணைக்கத்தினால் வழங்கப்படும் 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தைரியமான பெண்கள் விருதை பெற்றுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வியாழக்கிழமை (மார்ச் 04) உலகெங்கிலும் இருந்து விருது பெறுபவர்களின் பட்டியலை அறிவித்தது. இதில், சக குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புக்காக படுகொலை செய்யப்பட்ட ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஏழு பெண் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களும் தெரிவாகியிருந்தனர்.
அரசால் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், நாட்டின் ஓரங்கட்டப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளுக்காக ஞானராஜா தொடர்ந்து போராடி வருகிறார், பாதுகாக்கிறார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
“அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிப்புகளை எதிர்நோக்கும் சமூகங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீண்ட காலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவியை ரனிதா வழங்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட முறையில் போரினால் பாதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் பணியாற்றிய தனது விரிவான அனுபவத்தின் அடிப்படையில், இலங்கையின் மிகவும் நலிவுற்ற மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் பெற்றுக்கொடுப்பதில் ரனிதா அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.
உலகெங்கும் உள்ள பெண்களின் தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் அமைதிக்கான வாதிடலையும் அங்கீகரித்து, நீதி, மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், பெண்களை வலுவூட்டல் போன்றவற்றுக்காக தனிப்பட்ட ரீதியில் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியமைக்காக, அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக International Women of Courage விருது வழங்கப்பட்டு வருகிறது.
மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையத்தின் (சி.எச்.ஆர்.டி) சட்டத் துறையின் தலைவராக உள்ள ஞானராஜா, 2006 இல் மனித உரிமைகளுக்கான இல்லத்தில் சட்டத்தரணியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
பாலியல் வன்முறைகளில் இருந்து தப்பிப்பிழைத்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், மேலும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான முக்கியமான நீதிமன்ற வழக்குகளிலும் முன்னிலையானார்.
இப்போது அதன் 15 வது ஆண்டில், இராஜாங்க செயலாளரின் ஐ.டபிள்யூ.ஓ.சி விருது உலகெங்கிலும் உள்ள பெண்களை அமைதி, நீதி, மனித உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்காக தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்திய பெண்களை கௌரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
மார்ச் 2007 இல் இந்த விருது தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை, இராஜாங்க திணைக்களத்தினால் 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 155 க்கும் மேற்பட்டவர்களிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.