வாழ்வுரிமைக்காக போராடி வரும் தோட்ட மக்களை அடிமையாக்க வேண்டுமென துரைமார் நினைப்பது தவறாகும். அவர்கள் தொழிலாளர்களுடன் அணுகும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். முன்னர் போல் எமது மக்களை முட்டாளாக்க முடியாது. இவ்வாறான செயல்களை துரைமார் செய்யும் பொழுது மக்களின் எதிர்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். ஒரு பொறுப்புவாய்ந்த அரசியல் கட்சியாக மலையக மக்கள் முன்னணியும் பார்த்துக்கொண்டிராது என மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி பிரதி செயளாளர் சுரேன் கதிர்காமதம்பி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஹட்டன் நகரில் தோட்ட துரைமார்கள் ஒன்றிணைந்து தொழிலாளர்களுக்கெதிராக தமது வெறுப்பையும், தமது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது, தமக்கு துப்பாக்கி வேண்டுமேன்ற தொனியிலும் ஒரு அடையாள போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டத்தை நான் மிகவும் வேடிக்கைக்குறியதாகவும், மக்களை அடிமை தனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் ஒரு போராட்டமாக பார்க்கின்றேன். அத்தோடு இதனை வன்மையாக எதிர்க்கின்றேன்.
இந்த சமூகம் வெள்ளையர் காலத்தில் அடிபட்டு, பூட்ஸ் காலால் உதை வாங்கி பாடாத பாடு பட்டு இன்னுமே சரியான வாழ்வுரிமைகள் கிடைக்காமல் இன்னுமே போராடி வருகின்றது. இந்த நிலையில் ஒரளவு தலை தூக்க முயற்சிக்கும் மக்களை மீண்டும் அடிமைபடுத்த நினைப்பது தவறாகும்.வெறுக்க தக்க விசயமாகும். துரைமார்களின் கடுமையான போக்கினால்தான் மக்கள் இப்படி நடந்து கொள்கின்றனர். இவர்கள் தொழிலாளர்களுடன் அணுகும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். முன்னர் போல் எமது மக்களை முட்டாளாக்க முடியாது.
இதனை எதிர்ப்பதோடு தொடர்ந்து இவ்வாறான செயல்களை துரைமார் செய்யும் பொழுது மக்களின் எதிர்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியாக மலையக மக்கள் முன்னணியும் பார்த்துக்கொண்டிராது.
அதுமட்டுமல்லாமல் மேலும் சில தொழிற்சங்கங்கள் மக்களை தூண்டிவிட்டு கூத்து பார்ப்பதால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.