சசிகலாவின் அரசியல் விலகலுக்குத் தினகரன்தான் காரணம் என்றும் சசிகலா தப்பித்து விட்டார் என்றும் அவரின் சகோதரர் திவாகரன் பேட்டி அளித்துள்ளார்.
அரசியலில் இருந்தே விலகுவதாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா நேற்று அறிவித்தார். ‘நம்முடைய பொது எதிரி, தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் சசிகலாவின் இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியதாவது:
”இதற்கு ஒரே காரணம்தான். எங்கள் குடும்பத்தில் உள்ள சிலர்தான் இதற்குக் காரணம். தானே ராஜா, தானே முதல் மந்திரி என்று ஒருவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவர் (தினகரன்) கையில்தான் சசிகலா இருந்தார். சசிகலா மீது மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறார்.
சசிகலாவை வெளியேற்றி அந்த இடத்துக்குத் தான் வந்துவிட வேண்டும் என்று நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்தார். அதைத் தற்போது நிறைவேற்றி இருக்கிறார்.
அவர் தன்னுடைய முடிவை சசிகலா மீது திணித்து, அரசியலை விட்டு விலகச் செய்திருக்கிறார். அவரே தன்னை முதல்வர் வேட்பாளர் என்று கூறிக் கொண்டிருக்கிறார். திடீரென அமமுகவுடன் அதிமுக சேர்ந்தால் இணைத்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
சசிகலா எடுத்திருப்பது நல்ல முடிவு, ஏனெனில் துரோகிகள் மீண்டும் மீண்டும் அவரை பலிகடா ஆக்கிவிடுவர். அதில் இருந்து சசிகலா தப்பித்து விட்டதாகத்தான் நினைக்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் அவருக்கு 67 வயது ஆகிவிட்டது. அவரின் உடல்நிலை முக்கியம். இரத்த சம்பந்தமான எனக்குத்தான் அவரின் உடல்நலன் பற்றித் தெரியும்.
சசிகலா சிறைக்குச் செல்லக் காரணமே தினகரன்தான். முதல்வர் பதவிக்குத் தவறான நேரத்தில் சசிகலாவைத் தேர்ந்தெடுத்து, அவரைச் சிறைக்கு அனுப்பினார். சசிகலாவை மூளைச் சலவை செய்து, முதல்வர் பதவியேற்க சம்மதிக்க வைத்ததால்தான் பாதகமான தீர்ப்பு வந்தது. சசிகலா சிறையில் இருந்து சென்னை திரும்பியபோது உற்சாக வரவேற்பு அளித்ததில் 75 சதவீதப் பங்கு என்னுடையது. என்னைப் பொறுத்தவரை சசிகலா எடுத்திருப்பது நல்ல முடிவு” என்றார்.