வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட தனது காணியை விடுவிக்க கோரி பல வருடங்களாக போராடிய பெண் ஒருவர் இது வரை நியாயம் கிடைக்காத நிலையில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை (4) காலை இடம் பெற்ற போது குறித்த கூட்டத்திற்குள் அதிரடியாக நுழைந்து ஆளுனரிடம் பிரச்சினையை எடுத்து கூற முயன்றைமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருங்கன் பிட்டி பகுதியை சேந்த சீவரத்தினம் தயாள சீலி என்ற பெண்னுக்கு சொந்தமான 15 ஏக்கர் காணி வனவள திணக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டு சுமார் ஐந்து வருடங்கள் கடந்துள்ளது.
எனினும் இது வரை தனது காணி விடுக்கப்படாத நிலையில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் உணவுக்கே வழியின்றி தனது 75 வயதான தாயுடன் வாழ்க்கை நடத்தி வருகின்றார்.
குறித்த பிரச்சினை தொடர்பாக பிரதேச செயலகம் , அமைச்சர்கள், ஒருங்கிணைப்பு குழு, ஜனாதிபதி செயலகம் , மாவட்ட செயலகம் உட்பட பல இடங்களுக்கு நேரில் சென்று முறையிட்டும் கடிதங்கள் அனுப்பியும் இதுவரை முடிவுகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (4) காலை மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற நிலையில், கூட்டத்திற்கு வந்து நேரடியாக நீதி கோரி கூட்டத்திற்குள் நுழைந்த போது, அவரை பாதுகாப்பு தரப்பினர் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.
எனினும் குறித்த பெண் தனக்கான நீதியை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசி தீர்த்து தர வேண்டும் என கோரி கூட்டம் முடியும் வரை காத்திருந்த போதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் கூட்டம் நிறைவடைந்த பின்னர் தனது கோரிக்கை அடங்கிய மகஜரை வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களிடம் இறுதியில் ஒப்படைத்தார்.
குறித்த பெண்ணுக்கு அண்மையில் ஏற்பட்ட விபத்தில் 15 இடங்களில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தலை உட்பட பல பகுதிகள் தகடுகள் வைக்கப்பட்ட நிலையில் நோயுடன் போராடி வருகின்ற நிலையில் மேற்படி வனவள திணைக்களம் காணியை கையகப்படுத்தியுள்மை குறிப்பிடதக்கது.