குழந்தைகளை பேய் பிடித்தது என கூறி, பேயோட்டுவர்களை அணுகும் மூட நம்பிக்கைகளை நாட வேண்டாம் என பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர். பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
மீகஹவத்தை, கந்துபொட பகுதியை சேர்ந்த சிறுமியொருவர், பேயோட்டும் சிகிச்சையில் உயிரிழ்ததை தொடர்ந்து பொலிசார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
முகமது பாத்திமா ரிஃப்கன் என்ற 9 வயதுது சிறுமியே உயிரிழந்தார்.
சிறுமி மயக்கமடைந்து விழும் வரை 5 பிரம்புகளால் அடித்த 40 வயது பேயோட்டும் பெண்ணையும், சிறுமியின் 38 வயதான தாயையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
காலியில் வசித்து வந்த சிறுமியின் தாயார், கணவன் கைவிட்டதை தொடர்ந்து கடந்த வருடம் 3 குழந்தைகளுடன் தெல்கொட, கந்துபொட பகுதிக்கு குடிபெயர்துள்ளார்.
பல வருடங்களின் முன்னர் மரணித்த தனது தாயாரின் குரலில், 2வது பிள்ளை திடீர் திடீரென பேசுவதாகவும், அவரை பேய் பிடித்துள்ளது என்றும் கூறியே, அருகிலுள்ள இன்னொரு பெண்ணிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்.
வழிபாட்டிடம் ஒன்றை நடத்தி, பேயோட்டுவது போன்ற சிகிச்சையை நடத்தி வந்த பெண்ணிடமே, கடந்த 27ஆம் திகதி அழைத்து சென்றுள்ளார்.
சிறுமியின் உடல் முழுவதும் எண்ணெய் பூசி, 5 பிரம்புகளால், சிறுமி மயக்கமடைந்து விழும் வரை அவர் தாக்கியுள்ளார்.
பின்னர் அவர் பியகம வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்தார்.
மூட நம்பிக்கைகளால் சிறுவர்களை இதுபோன்ற கொடூரங்களிற்கு உட்படுத்த வேண்டாமென பொலிஸ் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.