மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் இன்று (1) திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் யானையின் தாக்குதலில் இருந்து அதிஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார்.
மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் – விளாத்திகுளம் உள்ளக வீதியால் விளாத்திக்குளத்திலிருந்து தேவையின் நிமித்தம் பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்திலிருக்கும் மடு, பிரதேச செயலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பெரிய பண்டிவிரிச்சானை நெருங்கிய போது யானையொன்று வீதியின் குறுக்கே நின்று தாக்க முயன்ற நிலையில் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
இவ்வாறு யானை சேதப்படுத்திய மோட்டார் சைக்கிளை குறித்த நபர் அயல் கிராம மக்கள் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் மீட்டுள்ளார்.
மேலும் இந்த வீதியில் தொடர்ந்து யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.