கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகளுடன் ராகுல் காந்தி உற்சாகமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் தமிழகம், புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த இரு நாட்களாகத் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முளகுமூடு பகுதியில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் நடனமாட முடியுமா என்று கேட்டார். சரி என்று உறுதியளித்த ராகுல் காந்தி, நண்பர்கள் யாராவது மேடைக்கு வாருங்கள் என்று உற்சாகப்படுத்தினார். மூன்று மாணவிகள் புன்னகையுடன் மேலே வந்தனர்.
அப்போது மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரையும் ராகுல் அழைத்தார். கரகோஷம் எழுந்த நிலையில், இருவரும் மேடைக்கு வந்தனர்.
ஆங்கிலப் பாடல் ஒன்றை மாணவியொருவர் பாட, மூன்று மாணவிகள், கே.எஸ்.அழகிரி மற்றும் தினேஷ் குண்டுராவ் ஆகியோருடன் ராகுல் காந்தி உற்சாகமாக நடனமாடினார். பாடல் வரிகளுக்கேற்ப மாணவிகள் நடன அசைவை மாற்றினர். மாணவிகளைப் பார்த்து ராகுல் காந்தியும் நடனத்தை மாற்றினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.