கரோனா தடுப்பூசியை இன்று பிரதமர் நரேந்திர மோடி செலுத்திக் கொண்டார். அப்போது 5 மாநிலங்களை சூசகமாக அடையாளப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
கரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16 முதல் செலுத்தப்பட்டு வருகின்றன. முக்கியத்துவம் கொண்டவர்களை பொறுத்து படிப்படியாக அளிக்கப்பட்டு வரும் தடுப்பூசி இன்று முதல் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களும் தகுதி பெற்றுள்ளனர்.
இந்தவகையினரில், 70 வயதான பிரதமர் மோடியும் இடம்பெற்றிருப்பதால் இன்று அவர் டெல்லியில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அவர் செலுத்திக்கொண்ட தடுப்பூசி நிகழ்வு பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தொடக்கம் முதல் தடுப்பூசி மருந்துகள் மீது எதிர்கட்சியினர் கிளம்பிய ஐய்யபாடுகளால் அவை சர்ச்சைக்கு உள்ளாயின. இதில், பாஜக அமைச்சர்கள் அதை செலுத்திக்கொள்ளாதது ஏன்? என்ற வகையிலும் கேள்விகள் எழுந்தன.
கேள்விக்குள்ளான பாரத் பயோடெக்கின் கோவேன்ஸின் தடுப்பூசியையே பிரதமர் மோடி இன்று செலுத்திக் கொண்டார்.
இதன்மூலம், அந்த தடுப்பூசியின் மீதான சர்ச்சைகளுக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக பாஜகவினர் பெருமிதம் கொள்ளத் தொடங்கி உள்ளனர். அதேசமயம் இந்நிகழ்வு, பிரதமர் மோடி 5 மாநில தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு தேடும் வகையிலும் அமைந்திருப்பதாகவும் கருதுகின்றனர்.
இதுகுறித்து பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘தடுப்பூசியை செலுத்தியவர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த செவிலியர் பி.நிவேதா. இவரது தாய்மொழி தமிழ். இவருக்கு உதவியாக உடன் இருந்தவர் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ரோசம்மா அணில்.
இதில், தேர்தல் நடைபெறவிருக்கும் 3 மாநிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டு விட்டது. மற்ற இரண்டிற்கு பிரதமர் மோடி அணிந்திருந்த உடை மேற்கு வங்க மாநில வகையை சார்ந்தது.
தோளில் அவர் போட்டிருந்தது அசாம் மாநிலத்தின் பாரம்பரியத் துண்டு. இதை அவர் உள்நோக்கத்துடன் செய்யவில்லை என்றாலும் அதன்மூலம், நாட்டின் அனைத்து மாநிலத்தவர்கள் மீதும் அவர் காட்டும் நேசத்தை புரிந்து கொள்ளலாம்.’ எனத் தெரிவித்தனர்.