25.6 C
Jaffna
January 4, 2025
Pagetamil
இலங்கை

புதிய அரசியல் யாப்பிற்காக கூட்டமைப்பு சமர்ப்பித்த வரைபு!

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர்குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள வரைபின் வடிவம் இது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், சட்டத்தரணி கனகஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் இதை தயாரித்துள்ளனர்.

அந்த வரைபின் வடிவம்-

தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,
புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான வல்லுனர் குழு,
32ஆம் இலக்க அறை, (புலொக் 02),
பௌத்தாலோக்க மாவத்தை,
கொழும்பு 7.

அன்புள்ள ஐயா/அம்மணி,

உங்களது அழைப்பின் பேரில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2021 பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற இரண்டு மணிநேர சந்திப்பிற்காக நாம் உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

2020 ஒக்டோபர் 20ஆம் திகதிய 2198/13ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கைக்கான ஒரு புதிய அரசியலமைப்பிற்கான ஆலோசனைகளுக்கான உங்களது அழைப்பிற்கு நாங்கள் முன்னர் பதிலளித்திருந்தோம்.

2021 பெப்ரவரி 20ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின்போது நாம் எமது ஆலோசனைகளின் முக்கிய அம்சங்களை விளக்கியதோடு, பின்வரும் கருத்துக்களையும் முன்வைத்தோம்:

• இலங்கை ஒரு பல்லின பன்மொழி சமூகமாகும்.

• வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பிரதேசங்களாக இருந்து வருகிறது. இந்நிலைப்பாடு எஸ்டபிள்யூஆர்டீ பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க ஆகிய பிரதமர்களினால் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்ஜேவி செல்வநாயகத்தோடு செய்துகொள்ளப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

• இது பின்னர் சனாதிபதி ஜே ஆர் ஜயவர்தனவினாலும் இலங்கை அரசினாலும் 1987 ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டது.

• அரசியலமைப்பிற்கான பதின்மூன்றாவது திருத்தம் அதிகார பகிர்விற்கான ஒரு வரைச்சட்டகத்தை அறிமுகப்படுத்தி, நாட்டின் ஆட்சிக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் நடைமுறையொன்றைத் தொடக்கியது. அக்காலத்தில் பிரதான தமிழ் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி பதின்மூன்றாவது திருத்தத்தைப் போதுமானதல்லவென நிராகரித்தபோதும், அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளில் நாம் ஒத்துழைத்ததோடு, அதன் பின்னர் தனி நாடொன்றிற்கான இலக்கினை பின்பற்றவுமில்லை.

• பதவிக்கு வந்த ஒவ்வொரு தலைவரும் அரசாங்கமும் அதிகாரப் பகிர்வு ஏற்பாடு அர்த்தமுள்ளதாக்கப்பட வேண்டுமென்பதை ஏற்றுக்கொண்டனர்:

1987 நொவெம்பர் 07 ஆம் திகதி புதுடில்லியில் வழங்கப்பட்ட சனாதிபதி ஜயவர்தனவின் வாக்குறுதி

1993 இல் சனாதிபதி ஆர். பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் மங்களமுனசிங்க தெரிவுக் குழு தீர்வாலோசனை

சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பேராசிரியர் ஜி.எல் பீறிஸ், அமைச்சர் சிறிபால டீ சில்வா மற்றும் ஏனையவர்களையும் உள்ளடக்கியிருந்த அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் 1995 ஆம் மற்றும் 1997 ஆம் ஆண்டுகளின் தீர்வாலோசனைகள் மற்றும் 2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத அரசியலமைப்புச் சட்டமூலம்

“ஓர் ஐக்கிய இலங்கையினுள் சமஸ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்;களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றை ஆராய்வதற்கு தரப்புகள் இணங்கிக்கெண்ட” 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் மாத ஒஸ்லோ அறிக்கை

“எந்தவொரு தீர்வும் இயன்றவரை அதி கூடிய அதிகாரப் பரவலாக்கத்தை நோக்கி விரிவடையும் ஒன்றாகத் தென்பட வேண்டும்” என்று கூறி, சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் 2006 இல் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிகழ்த்திய உரை

சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவினதும் அதன் பல்லின வல்லுநர் குழுவினதும் அறிக்கைகள்

2016 மார்ச் 9 ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் பாராளுமன்றத்தை ஓர் அரசியலமைப்புச் சபையாக மாற்றிய 2016 இல் தொடங்கப்பட்ட முன்னெடுப்பு (வழிநடத்தல் குழுவினால் 2019 ஜனவரி 16 ஆம் திகதி; அதன் இரண்டாவது இடைக்கால அறிக்கையோடு ஒரு புதிய நகல் அரசியலமைப்பு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது.)

• மேல் காணும் அனைத்தும் ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டினால் தேசிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற பரந்தளவு கருத்தொருமைப்பாடு நிலவுகிறதென்பதை எடுத்துக்காட்டுகின்றன.

• இது, இந்தியா, இணைத் தலைமை நாடுகள் (அதாவது ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா மற்றும் நோர்வே), ஐக்கிய நாடுகள் ஆகியவற்றிற்கும்; பொதுவாக உலகத்திற்கும் வழங்கப்பட்ட வாக்குறுதியுமாகும.;

• ஓர் அர்த்தமுள்ள அதிகாரப்; பகிர்வு எற்பாட்டிற்கான கோரிக்கையானது, ஓர் ஐக்கிய மற்றும் பிரிபடாத இலங்கையினுள் உள்ளக ரீதியாகப் பிரயோகிக்கப்படவேண்டிய தமிழ் மக்களின் சுய நிர்ணயத்திற்கான உரிமையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

• ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டினை வழங்கத் தவறுகின்றமை மற்றும் இது தொடர்பாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கடப்பாடுகளை மீண்டும் மீண்டும் மீறுகின்றமை ஆகியவை உள்ளக சுய நிர்ணயத்திற்கான உரிமையை மூர்க்கத்தனமாக மறுப்பதாக அமையும். சர்வதேச சட்டத்தின்கீழ், உள்ளக சுய நிர்ணயத்திற்கான உரிமையின் அத்தகைய மூர்க்கத் தனமான மறுப்பு, ஒரு மக்கள் குழுவினரை வெளிவாரி சுயநிர்ணயத்திற்கு உரித்துடையவர்களாக ஆக்கும்.

• நியாயமான ஆட்சி அதிகார்ப் பகிர்வை உறுதிப்படுத்தும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அடையுமுகமாக அரசியலமைப்பில் திருத்தப்படவேண்டிய பகுதிகளை இனங்காண்பதில் அக் குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் முன் வந்தோம்.

• அனைத்துச் சமூகத்தினது ஆட்களுக்கும் உரித்தான சம பிரசா உரிமைக்கான உரிமையானது, ஆட்சி அதிகாரப் பகிர்வை நோக்கி முடுக்கி விடப்பட்ட ஒரு நியாயமான முறைமையினால் மாத்திரமே உறுதிப்படுத்தப்பட முடியும்.

• “மீண்டும் நிகழாமை” உண்மையான நல்லிணக்கத்தை அடைவதன் மூலமே உறுதி செய்யபட முடியுமென்பதோடு, பரஸ்பரம் இணங்கிக் கொள்ளப்படும் ஒரு சமூக ஒப்பந்தத்தை – அரசியலமைப்பை – நாம் ஏற்படுத்;தினால் மாத்திரமே அது நிகழ முடியும்.

இரா. சும்பந்தன் பா.உ.
தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர

மாவை எஸ் சேனாதிராஜா
தலைவர், இலங்கை இலங்கைத் தமிழசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவர்

செல்வம் அடைக்கலநாதன், பா.உ.
தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் இணைத் தலைவர்

டீ. சித்தார்த்தன், பாஉ
தலைவர்;, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவர்

பிரதிகள்:
சனாதிபதி மேதகு கோட்டாபய ராஜபக்ஷ
பிரதம மந்திரி கௌரவ மகிந்த ராஜபக்ஷ
எதிர்க் கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எண்டொனியோ குட்டரெஸ்
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர்
ஐநா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம்

Pagetamil

கிளிநொச்சியில் வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் 

Pagetamil

கிளிநொச்சி விபத்தில் உயிரிழந்த தாய்க்கும் சேய்க்கும் நீதி கோரி போராட்டம்

Pagetamil

பதக்கம் சின்னத்தில் போட்டியிடவிருக்கும் திலித் ஜயவீர

east tamil

தூய்மையான இலங்கைக்கான முயற்சி: பராக்கிரம சமுத்திரத்தில் சிரமதானம்

east tamil

Leave a Comment