நாளையிலிருந்து தனியார் பேருந்து சேவை புதிதாக திறக்கப்பட்ட தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட உள்ளதாக வடக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் முகாமைத்துவ சபை உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவருமான .சி.சிவபரன் தெரிவித்தார்.
அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட தூர இடங்களுக்கான பேருந்து நிலையம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்பு நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாநகர முதல்வர் ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க
தனியார் போக்குவரத்து சங்க பேருந்துகள் நாளை காலையில் இருந்து புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்திலிருந்து தமது சேவையை தொடர இருக்கின்றன. எனினும் அந்த சேவைக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளும் தமக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அத்தோடு இ.போ.ச சாலை முகாமையாளர்கள், மற்றும் பிராந்திய முகாமையாளர் ஆகியோருக்கு வடக்கு மாகாண ஆளுநர். அரச அதிபர் மற்றும் யாழ்ப்பாண மாநகர முதல்வர் ஆகியோர் பூரண விளக்கமளித்து. இ.போ.ச பேருந்துகளையும் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து இணைந்து சேவையாற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கப்பாட்டை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
பொதுமக்களுக்கு திறம்பட சேவையினை வழங்கும் முகமாக நாளை காலையிலிருந்து புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து தூர இடங்களுக்கான தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் இடம்பெற உள்ளன.
நாளைய தினம் இபோ ச பேருந்துகளும் தமது சேவையினை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அது தவறும் பட்சத்தில் வட மாகாண ஆளுநர் அதற்குரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.