மன்னார் மாவட்டத்தில் உள்ள சில சோதனை சாவடிகளில் சோதனை என்கின்ற பெயரில் விற்பனைக்கு எனபொருட்களை ஏற்றி வருகின்ற வாகனங்களை இடைமறித்து சோதனை மேற்கொள்வதற்கு, தங்களுக்கு தேவையான பொருட்களை வாகனத்தில் இருந்து இராணுவத்தினர் எடுத்து கொள்வதாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக வருபவர்களும் விற்பனைக்காக செல்பவர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மன்னார் பிரதான பாலப்பகுதியிலும் வங்காலை, குஞ்சுக்குளம் பகுதியிலும் உள்ள சில சோதனை சாவடிகளில் மேற்படி சம்பவம் இடம் நிகழ்வதாகவும், விற்பனைக்காக வரும் போதும் விற்பனை முடிந்து செல்லும் போதும் இவ்வாறான செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதாகவும் தங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இராணுவத்தினர் எடுக்கும் பொருட்களை விருப்பமின்றி அவர்களிடமே கொடுத்து விட்டு வருவதாகவும் தங்களின் வியாபார இலாபம் அதிக அளவில் இவ்வாறான செயற்பாடுகளால் குறைவடைவதாகவும் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக யாரை சந்திப்பது எவ்வாறு இந்த செயற்பாட்டை தடுப்பது என்று கூட தங்களுக்கு தெரியவில்லை எனவும், எனவே மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர், மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு பாதிக்கப்பட்ட சிறு தொழில் விற்பனை முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.