திருகோணமலையிலுள்ள நகைக்கடையொன்றில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான நகையை கொள்ளையிட்ட கும்பல் பற்றிய தகவல்களை பொலிசார் கண்டறிந்துள்ளனர். இந்த கொள்ளையுடன் தொடர்புடைய 7 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்.சி வீதியிலுள்ள நகைக்கடையொன்றில் கடந்த 8ஆம் திகதி நடந்த கொள்ளையில், 38 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டன.
இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஐஸ் மஞ்சுவின் சகோதரன் என்பது தெரிய வந்துள்ளது. பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஐஸ் மஞ்சு தற்போது தலைமறைவாக வாழ்கிறார்.
திருகோணமலையில் வசிக்கும் 35 வயதான சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு கைக்குண்டு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடல்வழியாக கோணேச்சர பகுதிக்கு வந்த கொள்ளையர்கள், கொள்ளையிட்ட பின்னர் அதே வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.