மன்னார் மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களின் நீண்ட கால பிரச்சனையாக காணப்பட்ட மேய்ச்சல் தரை இல்லாமை தொடர்பிலான பிரச்சனைக்கு தீர்வு காண வடக்கு ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையிலான குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவினால் பரிந்துரைக்கப்பட்ட புள்ளருத்தங்கண்டல் பகுதியில் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த விஜயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், நானட்டன் பிரதேச செயலாளர், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர், கமநல சேவை உதவி ஆணையாளர், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர், கால்நடை அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர், வனவள திணைக்கள உத்தியோகஸ்தர்கள், செட்டியார் மகன் கட்டை அடம்பன் விவசாய அமைப்பு தலைவர் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நீண்ட காலமாக மேய்ச்சல் தரைக்கு என அடையாளப்படுத்தப்பட்டுள்ள புள்ளருத் தான் கண்டல் பகுதியில் சுமார் 351 ஏக்கர் நிலப்பகுதியில் அடாத்தாக காடுகளை வெட்டி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சிலர் மேய்ச்சல் தரைக்காக குறித்த பகுதியை வழங்காத நிலையில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் இப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் விதத்தில் மேற்படி விஜயம் இடம் பெற்றது.
குறித்த குழுவினர் முதல் கட்டமாக செட்டியார் மகன் கட்டையடம்பன் பகுதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் பல்வேறு விதமான நடைமுறை சிக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அதனை தொடர்ந்து சொந்த நிலங்களில் விவசாய செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் விவசாய நிலங்களை விடுவிப்பது தொடர்பாகவும், அடாத்தாக கைப்பற்றி அரச காணிகள் விவசாய செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகள் மற்றும் ஏனையவர்களின் காணிகளை பறிமுதல் செய்வதற்கும், அதே நேரத்தில் புள்ளருத்தன்கண்டல் நிலப்பகுதியில் அரச மற்றும் தனியார் காணிகளை அடையாளம் காண சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு பிரதேச செயலாளருக்கும் உடனடியாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் குறித்த காணி தொடர்பான பிணக்குகள் தொடர்பிலான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் நான்காம் திகதி மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மேலதிக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.