தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற இருவர், மீளவும் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் இருந்து தனிநபர்களாக பிரிந்து சென்றவர்கள், இப்பொழுது அமைப்பாகி மீள முயற்சித்து வருகிறார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியில் இருந்தவர் இரா.துரைரெட்ணம். பின்னர், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் இணைந்து செயற்பட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு பிரிந்து சென்ற பின்னர், அந்த அமைப்பிலிருந்து இரா.துரைரெட்ணம் பிரிந்து, வரதர் அணியாகவே செயற்பட்டு வருகிறார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் மீள இணைவதற்காக நீண்டகாலமாக முயற்சித்து வரும் இவர், தற்போது அந்த முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளார்.
இதற்காக கூட்டமைப்பு தலைவர்களுடன் நடத்திய பேச்சில், அவருக்கு பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் ஏதாவதொரு கட்சியுடன் இணைந்து அவர் தேர்தலில் களமிறங்கலாமென கூறப்பட்டது.
ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. தமது கட்சியை இணைக்க வேண்டுமென கேட்டுள்ளார்.
தமது அமைப்பை மீள இணைக்கும்படி இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதனிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதேபோல, ரெலோவில் இருந்து பிரிந்து சென்று சுயேட்சையாக களமிறங்கியவர் கணேஸ் வேலாயுதம். கடந்த தேர்தலின் பின்னர் அவரும், அரசியலின் சூட்சுமத்தை புரிந்து கொண்டுள்ளார் போல தெரிகிறது. மீளவும் ரெலோவில் இணைய விரும்புகிறார்.
இது தொடர்பில் கட்சியின் தலைமைக்கு தூது விடப்பட்டுள்ளது. செல்வம் அடைக்கலநாதன்தான் விடயத்தை ஆறப் போட்டுள்ளார்.