விடம் கொண்ட மீனைப் போலும்
பாம்பின் வாயில் பற்றிய தேரை போலும்
பற்றி எரியும் மெழுகை போலும்
திடம் கொண்ட ராமபாணம் பட்ட போது
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான்
இலங்கை வேந்தன்
ஒரு ஜாதகன் கடன் வாங்குவதும் அந்தக் கடனை வட்டியுடன் திருப்பி அடைப்பதும் அவரவரின் சுய ஜாதகத்தின் கிரக நிலையை அடிப்படையாகக் கொண்டவை.
ஒரு ஜாதகத்தில் எந்த லக்னமாக இருந்தாலும் அந்த லக்னத்துக்கு மூன்றாம் அதிபதி, ஆறாம் அதிபதி, எட்டாம் அதிபதி அல்லது பன்னிரண்டாம் அதிபதி தசையை அந்த ஜாதகத்தில் நடக்கும்போது அந்த ஜாதகன் கடனால் கஷ்டப்படும் விதி ஏற்படுகிறது.
இந்த 4 இடத்தின் அதிபதிகள், இந்த இடங்களிலேயே அமர்ந்திருந்தால், அவர்களே விபரீத ராஜயோகத்தைத் தந்து கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி மற்றும் சட்டத்தின் மூலமாக அந்தக் கடனிலிருந்து தப்பிக்கும் யோகத்தை அருள்வார்கள். இந்த நான்கு ஸ்தானங்களும் ஜோதிடத்தில் மறைவு ஸ்தானங்கள் என்று சொல்லப்படுகின்றன.
கடன் விமோசன பரிகாரங்கள்!
இதைப்போலவே இந்த நான்கு இடத்தில் அமைந்துள்ள கிரகங்கள், ஒரு ஜாதகத்தில் தங்களின் தசாகாலத்தையோ அல்லது புத்தியையோ நடத்தினால், நிச்சயமாகக் கடன் பிரச்னையில் சிக்கும் வாய்ப்பு உண்டு.
எந்தக் கிரகம் கடனுக்குக் காரணமாக அமைகிறதோ, அதன் பாவங்களையும் இயல்புகளையும் கொண்டு, அந்தக் கடன் வங்கியிடமிருந்தா, தனியார் துறையினரிடம் இருந்தா அல்லது உற்றார் உறவினர்களிடமிருந்தா… எந்தத் தரப்பில் பெறப்பட்டது என்று சொல்லிவிட முடியும்.
அந்தக் கிரகம் பாவ கிரகமா இருந்து விட் டால், கடன் சிக்கல் அதிகமாகவே இருக்கும். நீச்சம் பெற்ற கிரகம் ஒரு லக்னத்துக்கு எந்த இடத்தில் அமர்ந்து தசை நடத்தினாலும், நிச்சயமாகக் கடன் வகைகள் அந்த ஜாதகனைச் சூழும்.
கடன் தரும் கிரகம் சுபகிரகமாக இருக்கும் பட்சத்தில் அல்லது சுப அதிபதிகளாக இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகன் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் கடன் பெற்றிருப்பர். சிறு சிறு பாதிப்புகள் அடைந்தாலும், கடனை நல்ல முறையில் அடைத்து நிறைவில் வெற்றி காண்பார்கள்.
‘அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் கிரகம்’ என்பது ஜோதிட வாக்கு. இந்த இடத்தின் பாதிப்பால் கடனுக்கு ஆளாகும் ஜாதகக்காரர்கள், வேறு இடத்துக்குத் தலைமறைவாகச் செல்லும் நிலையும் ஏற்படும் என்பர்.
நாம் குறிப்பிட்ட ஸ்தானங்களில் புதன் அமையப் பெற்றால், அந்த ஜாதகக்காரர்கள் கூட்டுத் தொழிலில் ஆதாயம் பெற்றுத் தன்னுடன் இருக்கும் பங்குதாரர்களை ஏமாற்றவோ அல்லது ஏமாந்து போகவோ செய்யக் கூடிய அமைப்பைப் பெறலாம். மேலும் சீட்டு நிறுவனங்களால் ஏமாற்றம் அடைந்தும் கடனால் தவிக்கும் நிலை ஏற்படக்கூடும்.
இப்படியான கடன் நிலைக்கு ஆளாக்கும் கிரக அமைப்புகள் நம்முடைய முன்வினைகளின் விளைவாகவே அமைகின்றன. துரோகங்கள், தாய், தந்தை, சகோதர – சகோதரிகள் அல்லது முன்னோர்களிடமிருந்து பெற்ற சாபங்கள் போன்ற காரணங்களால், கடன் எனும் கஷ்டம் ஒரு ஜாதகனை வந்தடைகிறது.
இவை தவிர, ஏவல், அங்கலாய்ப்பு, கண் திருஷ்டி, தீட்டு சார்ந்த பொருள்கள் அல்லது வஸ்திரங்கள், பவித்ரம் இல்லாத தன்மை, ஐஸ்வர்யம் இல்லாத பொருள்கள், அடுத்தவர்களுடைய வஸ்திரம் அல்லது திருட்டுப் பொருள், தரித்திரம் கொண்ட விஷயங்கள் (அதிகாலை குளிக்காமல் சாப்பிடுவது), பசுங்கன்றுக்குப் பால் விடாத தோஷம், சுமங்கலிகளின் வேதனை, கர்ப்பவதிகளின் மனச்சுமை, குழந்தைகளின் அழுகுரல், அழுக்கு வஸ்திரம் போட்டுக்கொள்வது, அந்தி நேரத்தில் உண்ணுவது, உணவை வீணாக்குதல், தானியங்களை அழிப்பது, விருட்ச வழிபாடு செய்யாமல் இருப்பது, வீட்டில் தீபம் ஏற்றாமல் இருப்பது, வீட்டில் ஓயாமல் சண்டை போடுவது போன்ற விஷயங்களும் கடன் சுமைகளை நிச்சயம் ஏற்படுத்தும்.
எவனொருவன், மன உறுதியுடன் தெய்வ வழிபாடுகளையும், அர்த்தமுள்ள பரிகாரங்களையும் செய்து, அறத்தைப் பின்பற்றி வாழ்கிறானோ, அவனுக்குக் கடன் பிரச்னைகள் ஏற்படாது; கடன் வாங்கினாலும் திரும்பி செலுத்தும் வல்லமை வாய்க்கும்.
இனி கடன் பிரச்னைக்கான பரிகாரங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வோமா?
கடன் என்றாலே நினைவுக்கு வருவது ஹரிச்சந்திர மகாராஜா. சகலத்தையும் இழந்தும் சத்தியத்தைக் கைவிடாத ஹரிச்சந்திர மகாராஜாவின் கதையைக் கேட்பதும், தெருக் கூத்து நாடகத்தைப் பார்ப்பதும், அதில் வரும் பாடல்களைக் கேட்பதும் நன்மை தரும்.
ஏழுமலையானை மனதாரப் பிரார்த்தித்து, 7 சனிக்கிழமைகள் விரதமிருந்து, திருப்பதிக்குச் சென்று முடிக்காணிக்கை செலுத்தி வழிபடுவது சிறந்த பரிகாரமாகும். முடி உதிரும்போது கடனால் ஏற்படும் பாரங்கள் விலகவேண்டும் எனப் பிரார்த்தனை செய்து, ஏழுமலையானை கண்ணார தரிசத்து வந்தால், கடன் பிரச்னை தீரும்; பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
வீட்டில் வடக்கு திசையில் சற்று உயரமான இடத்தில் குபேரரை வைத்து வழிபடுவது விசேஷமானது. மாதம் ஒருமுறையேனும் குபேர பூஜை செய்து வழிபடலாம்.
குசேலர் குபேரனை விடப் பன்மடங்கு செல்வத்தைக் கொடுப்பதற்கு அதிகாரம் கொண்டவர். நமக்கு நீண்ட நாள்களாக வராத தொகை வரவேண்டும் என விரும்பும் அன்பர்கள் வீட்டிலேயே குசேலர் கதையைப் படிக்கலாம் கதாகாலட்சேபமாகக் கேட்கலாம்.
கடன் விமோசன பரிகாரங்கள்!
வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும் நேரத்தில் 1, 9, 12, 108 என்ற எண்ணிக்கையில் வீட்டில் நெய்தீபம் ஏற்றுவது, தீபப் போற்றிப் பாடல்களைப் பாடி வழிபடலாம். இதனால் தனவரவு பெருகும்.
பழையன கழிதலும் புதியன புகுதலுமே வாழ்க்கை. வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருள்களைக் கழித்து, வசிக்கும் இடத்தைப் பவித்திரமாக வைத்துக்கொண்டாலே, செல்வம் செழிக்கும்; கடன் பிரச்னைகள் விலகும்.
கனகதாரா ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் பெருமையையும் புகழையும் போற்றிச் சொல்லக் கூடிய மகத்துவம் வாய்ந்த ஸ்துதி. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தை வீட்டிலுள்ள பெண்கள் தினமும் அதிகாலை அல்லது அந்திப்பொழுதில் படித்தாலோ, கேட் டாலோ அந்த வீட்டில் செல்வநிலை பெருகும்.
பசும்பால், வலம்புரி சங்கு, துளசி, தேன், செந்தாமரை, வெண்தாமரை ஆகியவை செல்வச் சாந்நித்தியம் அளிப்பவை. இவை வீட்டிலிருந்தால் ஐஸ்வர்யம் பெருகும்.
கோ பூஜை, கஜ தரிசனம், பட்டு வஸ்திர தானம், நதிநீர் சமர்ப்பணம், அதிகாலை நதிநீர் ஸ்நானம் ஆகியவை செல்வ உயர்வுக்கு வழிவகுக்கும்.
கிரகங்களும் கடன் பரிகாரங்களும்!
சனியின் பாதிப்பால் கடன் தொல்லை அமைப்பு எனில், திருப்பதி, திருக்கொள்ளிக்காடு, திருநள்ளாறு போன்ற தலங்களுக்குச் சென்று ஜாதகத்தின் அமைப்பு மற்றும் தசாபுத்திகளுக்கு ஏற்றவாறு பரிகாரங்கள் செய்யவேண்டும்.
ராகுவால் கடன் அமைப்பு எனில், காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில் (கல் கருடன் வழிபாடு), திருவிடைமருதூர் ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட வேண்டும்.
கேதுவினால் கடன் சிரமங்கள் எனில் கீழ்பெரும்பள்ளம், பிள்ளையார்பட்டி ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபடலாம். குறைந்த பட்சம் வீட்டின் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் சங்கடகர சதுர்த்தி வழிபாட்டில் கலந்துகொள்வது சிறப்பு.
செவ்வாயின் பாதிப்பினால் கடன் அமையப் பெற்றால் திருச்செந்தூர், திருத்தணி அல்லது பழநி சென்று வழிபடலாம். ஜாதகத்தில் செவ்வாயின் பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு நிற வஸ்திரங்கள், சிவப்பு நிற பழங்கள், துவரம் பருப்பு தானமாகக் கொடுப்பதால் கடன் பிரச்னை நீங்கும்.
புதன் கிரகம் பாதிப்பு தந்தால், மதுரை மீனாட்சியை தரிசித்து வரலாம். விஷ்ணு கோயில்களுக்குச் சென்று வெண்தாமரை மற்றும் பச்சை நிற பழங்கள், துளசி ஆகியவற்றைச் சாத்தி வழிபடவேண்டும்.
குருபகவான் கடன் பாதிப்பு தரும் நிலையில் இருந்தால், கோ பூஜை அல்லது கோதானம் செய்யலாம். வியாழக்கிழமைகளில் மகான்களின் சந்நிதானத்துக்குச் சென்று வழிபடுவதுடன், இனிப்புப் பொருள்களைத் தானம் செய்ய வேண்டும்.
சூரியன் கடன் பாதிப்பைத் தருகிறார் எனில், பட்டாபிஷேக ராமர் படத்துக்கு வழிபாடு செய்வதும், ராமாயணம் படிப்பதும், ஶ்ரீராமஜயம் எழுதுவதும் சிறந்த பரிகாரங்களாகும்.
சந்திரன் ஒரு ஜாதகத்தில் கடன் பாதிப்பைக் கொடுப்பதாக அமைந்தால், பௌர்ணமி அன்று வீட்டிலேயே மகாலட்சுமி பூஜை செய்வது விசேஷம். தினமும் மாலை நேரத்தில் சந்திர அஷ்டோத்திரம் படிப்பதால், பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சந்திர பாதிப்பு உள்ளவர்கள், ஆலய அபிஷேகத்துக்குப் பசும்பால் கொடுக்கலாம். பிரதோஷ வழிபாடு கடன்கள் அடைவதற்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் கடன் கஷ்டத்தைக் கொடுத்தால், ஶ்ரீரங்கநாதர் தரிசனம் நன்மை பயக்கும்.சிவப்பு நிற பழங்கள், செந்தாமரை மலர்க,ள் உணவுப்பொருள்கள் ஆகியவற்றைத் தானம் கொடுப்பதும், வெள்ளி பொருள்களை உண்டியலில் போடுவதும் மிகுந்த ஏற்றம் தரும்.