அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பாரம்பரிய வீடொன்று இடிக்கப்படாமல் தூக்கப்பட்டு வேறு இடத்துக்கு நகர்த்தப்பட்டது.
சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ளது 139 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழைய விக்டோரியன் ஹவுஸ்.
2 மாடிகள் கொண்ட இந்த கட்டடம் அமைந்துள்ள நிலத்தை வீட்டின் உரிமையாளர் வேறு ஒருவருக்கு விற்க முயன்றார். ஆனால், பழமையான இந்த கட்டத்தை இடிக்க அவருக்கு மனமில்லை.
இதனால் கட்டடத்தை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு இடத்தை விற்க திட்டமிட்டார். இதற்காக ஹவுஸ் மூவவிங் செய்யும் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.
வீட்டை நகர்த்த 15க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் அனுமதி பெற்று வேலையை தொடங்கியுள்ளார்.
1882 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பழமையான விக்டோரியன் ஹவுஸ் அடியோடு பெயர்க்கப்பட்டு, இராட்சத சக்கரங்கள் கொண்ட ட்ரக் மீது வைக்கப்பட்டு இழுத்து செல்லப்பட்டது.
பிரமாண்ட கட்டடம் டிரக்கில் சென்ற காட்சிகளை பலர் ஆர்வமுடன் கண்டு இரசித்தனர். குடியிருப்பு ஒன்றை கட்ட இடம் கொடுக்கும் வகையில், 482 மீட்டர் தொலைவிற்கு வீடு நகர்த்தப்பட்டது. இரண்டு மாடி விக்டோரியன் வீடு ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய முகவரிக்கு மாற்றப்பட்டது.

807 பிராங்க்ளின் ஸ்ட்ரீட்டில் விக்டோரியன் ஹவுஸ் மாற்றப்பட்டிருக்கிறது, கட்டடத்தை நகர்த்த இலங்கை மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். பிரமாண்ட கட்டடம் பழமையான கட்டடம் என்பதால் மணிக்கு சுமார் 1 மைல் என்ற வேகத்தில் நகர்த்தப்பட்டது.