அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் இன்ஜின் தீப்பற்றி எரிந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்திலிருந்து 231 பயணிகள் மற்றும் 10 அதிகாரிகளுடன் ஹோனோலுலுவுக்கு புறப்பட்ட யுனைட்டட் 328 என்ற விமானம் நடுவானில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே என்ஜினின் வலதுபுறம் தீப்பற்றியது. எரிந்த பாகங்கள், புரோம்ஃபீல்டு நகரம் முழுவதும் சிதறிகிடந்தன.
வீதிகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் விமானத்தின் எரிந்த பாகங்கள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
விமானத்தில் தீ பற்றியதை தொடர்ந்து, அந்த விமானம் டென்வர் விமான நிலையத்திற்கே திருப்பிவரப்பட்டு தரையிறக்கப்பட்டது.
விமானத்திலிருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த விமானத்திலிருந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
விபத்திற்கான காரணம் குறித்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்துறை விசாரணை நடத்திவருகிறது.
இதேபோல் நெதர்லாந்திலும் இன்று ஒரு சம்பவம் நடந்தது. அதாவது சரக்கு விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றி எரிந்தது.
அதன் பாகங்களும் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீதிகளில் நடந்து சென்ற சிலர் மீதும் விமான பாகங்கள் விழுந்ததால் காயங்கள் ஏற்பட்டது.
அதேபோல் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.